சென்னை:
நதிகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் அனைவரும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி, தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் கூறினார்.
மனதின் குரல் – 26.3.17 இன்று ஒலிபரப்பான நிகழ்ச்சி:
எனதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் என் நல்வணக்கங்கள். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் தேர்வுக்கான தயாரிப்புக்களோடு ஒன்றியிருக்கிறார்கள். யாருக்கெல்லாம் தேர்வுகள் முடிந்து விட்டதோ, அவர்கள் சற்றே ஆசுவாசமாக இருக்கிறார்கள்; எங்கெல்லாம் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றதோ, அந்தக் குழந்தைகளின் குடும்பங்கள் சற்று அழுத்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் மாணவச் செல்வங்களோடு பகிர்ந்து கொண்ட விஷயங்களை மீண்டும் ஒரு முறை கேளுங்கள், தேர்வுக்காலங்களில் அந்தக் கருத்துக்கள் உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும்.
இன்று மார்ச் மாதம் 26ஆம் தேதி. இந்த நாள் தான் வங்காளதேசத்தின் சுதந்திரத் திருநாள். அநீதிக்கு எதிரான வரலாற்றுப் போராட்டம்……. பங்க பந்துவின் தலைமையின் கீழ் வங்காளதேசத்தின் மக்கள் மகத்தான வெற்றி பெற்றார்கள். இன்று இந்த மகத்துவம் நிறைந்த நாளிலே, நான் வங்காளதேசத்தின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வங்காளதேசம் மேலும் முன்னேற்றமும் வளர்ச்சியும் காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன், பாரதம் வங்காளதேசத்தின் உறுதியான நண்பன் என்பதை நான் அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன், ஒரு நல்ல நண்பன் என்ற முறையில், நாம் தோளோடு தோள் சேர்ந்து ஒட்டுமொத்த பிரதேசத்திலும் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு நமது பங்களிப்பை தொடர்ந்து ஆற்றி வருவோம்.
ரவீந்திரநாத் டகோர், அவரது நினைவுகள் எல்லாம் நாமெல்லாரும் போற்றிவரும் செல்வங்களாக இருப்பது நமக்குப் பெருமையாக இருக்கிறது. வங்காளதேசத்தின் தேசியகீதம்கூட ரவீந்திரநாத் டகோர் அவர்கள் இயற்றியது தான். குருதேவ் டகோரைப் பற்றி ஒரு மிக சுவாரசியமான விஷயம்….. 1913ஆம் ஆண்டில் நோபல் பரிசைப் பெற்ற ஆசியக்கண்டத்தைச் சேர்ந்த முதல் நபர் ரவீந்திரநாத் டகோர் அவர்கள்; அவருக்கு ஆங்கிலேயர்கள் knight என்ற பட்டத்தையும் அளித்தார்கள். 1919ஆம் ஆண்டு ஜலியான்வாலாபாக் படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது; அந்த சமயத்தில் ரவீந்திரநாத் டகோர் அவர்கள் இந்தப் படுகொலைக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்த மாமனிதர்களில் ஒருவராக விளங்கினார். இந்தப் படுகொலை பன்னிரெண்டே வயது நிரம்பிய ஒரு பாலகன் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. வயல் வெளிகளிலும், மைதானங்களிலும் ஆடிவிளையாடி வந்த அந்த சின்னஞ்சிறு பாலகன் மனதில் இந்தச் சம்பவம் ஆறாத வடுவாக ஆனது. 1919ஆம் ஆண்டில் பன்னிரெண்டே வயது நிரம்பிய அந்த பாலகன் பாரத மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்த தேசபக்தன், தியாகி பகத் சிங். இன்றிலிருந்து 3 நாட்கள் முன்பாகத் தான், மார்ச் மாதம் 23ஆம் தேதி பகத் சிங்கையும் அவரது தோழர்களான சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரையும் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டார்கள்; மார்ச் மாதம் 23ஆம் தேதி நடந்த இந்த சோகமான சம்பவம் நடந்த போது, தியாகச் செம்மல்களான பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் முகங்களில் பாரத அன்னைக்கு அருஞ்சேவை புரிந்த மகிழ்வு கொப்பளித்தது, சற்று கூட மரணம் பற்றிய அச்சம் காணப்படவேயில்லை. வாழ்கையின் அனைத்துக் கனவுகளையும் பாரத அன்னையின் விடுதலையின் பொருட்டு அவர்கள் ஆஹுதியாக அளித்தார்கள். இந்த மூவரும் இன்றும் கூட நம் அனைவருக்கும் கருத்தூக்கமாகத் திகழ்கிறார்கள்.