
விவசாயிக்கு கிடைத்த பத்மஸ்ரீ: அமெரிக்க அதிபர் பாராட்டிய திராட்சை ரத்னா.! பத்மஸ்ரீ விருது பெறும் சிந்தல வெங்கடரெட்டி ( 69) இயற்கை விவசாயத்தில் அயராது உழைப்பவர். சொந்த ஊர் செகந்திராபாத்தில் உள்ள ஆல்வால்.
வெங்கட ரெட்டி இயற்கை விவசாய முறையில் பயிர் செய்து பலப்பல ரெக்கார்டுகளை ஏற்படுத்தியுள்ளார்.திராட்சை சாகுபடியில் புதிய முறையை கண்டறிந்தவர். திராட்சை ரத்னா என்று புகழப்படுபவர்.
இவர் விளைவித்த திராட்சைப் பழங்களை இரு அமெரிக்க அதிபர்கள் ருசி பார்த்து உள்ளார்கள் என்பது சிறப்பு.
2001ல் ஹைதராபாத் சுற்றிப்பார்க்க வந்த அமெரிக்க அதிபர் பில் கிளின்டனுக்கும், 2006ல் ஹைதராபாத் வருகை தந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கும் தாம்சன் ப்ளேம், பிளாக் சீட்லெஸ் திராட்சைப் பழங்களை 30 கிலோ வீதம் கொடுத்தனுப்பினார் வெங்கடரெட்டி.
எப்படிப்பட்ட ரசாயன எருவும் பயன்படுத்தாமல் பூமியில் இருந்து எடுத்த மண்ணைக் காயவைத்து பலமுறை பயிர்களுக்கு இட்டு அவற்றின் மூலமே மிக அதிக மகசூலை சாதித்துள்ளார். இவ்விதமாக இவர் அன்ப்-ஹீஷாஹி சீட் திராட்சை பயிரிட்டு ஹெக்டாருக்கு 105 டன் மகசூல் சாதித்து உலக ரெக்கார்டு ஏற்படுத்தினார். அதேபோல் ஹெக்டாருக்கு 85 டன் தாம்சன் சீட்லெஸ் திராட்சை சாகுபடி செய்தார். அதேபோல் நெல் வகையில் பிபிடி 5204 வகையை பயிரிட்டு ஹெக்டாருக்கு 10.81டன் சாகுபடியை சாதித்தார்.
” எனக்கு இதுவரை நிறைய விருதுகள் வந்துள்ளன. இப்போது மத்திய அரசு என்னை கௌரவித்து பத்மஸ்ரீ விருது அளித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. இது விவசாயிகளுக்கு மத்திய அரசு அளிக்கும் கௌரவமாகவே நினைக்கிறேன்” என்று வெங்கட ரெட்டி தெரிவித்தார்.
மண்ணே எருவாகவும் மண்ணே பூச்சி மருந்தாகவும்… பயிரிடுபவர் சிந்தல வெங்கடரெட்டி. இவர் 40 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். சர்வதேச பேடென்ட் பெற்ற முதல் இந்திய விவசாயியாக விளங்குகிறார்.
நிலத்தை தோண்டி மண்ணை வெளியே எடுத்து வெயிலில் காய வைத்து அதையே பயிர்களுக்கு எருவாக இடுவார். அதுமட்டுமின்றி… அதே மண்ணை நீரில் கரைத்து பயிர்களின் மேல் பூச்சி மருந்தாகப் பீச்சடிப்பார். இதன் மூலம் உலகமே இவரை திரும்பி பார்த்தது.
திராட்சை சாகுபடியில் புதிய பிரயோகங்கள் முயற்சித்து வெற்றி பெற்றுள்ளார். கீசரிகுட்டா அருகில் உள்ள குந்தனபல்லியில் இவருக்கு திராட்சை தோட்டம் உள்ளது. ஆல்வாலில் ரிசெர்ச் பார்ம் உள்ளது.
விட்டமின் ஏ, சி உள்ள அரிசியை விளைவித்துள்ளார். மாலைக்கண் நோயை விரட்டும் பயிர்களைப் பயிரிடும் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள பத்மா அவார்டு பெறுபவர்களில் ஐவர் தெலுங்கர்கள் என்பது சிறப்பு.



