
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தாக்குதல் அதிவேகமாகப் பரவி வருகிறது. கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு சீனாவில் 170 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த வைரஸால் 7,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட சீனாவின் மிகப் பெரும் நகரங்களில் பரவியது. மேலும், அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்று பரவி வருகிறது.

சீனாவின் உயிரி தொழில்நுட்ப ஆயுதச் சோதனை முயற்சியால் இந்த வைரஸ் உருவாக்கப் பட்டு, முறிவு மருந்து கண்டுபிடிக்கப் படாத நிலையில், அது வெளியே பரவியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக சீனா தெரிவித்தது.
இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 7,700ஐக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வைரஸ் பரவி வரும் வேகம் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவைக் கடந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. பாகிஸ்தானுக்கும் அதன் பாதிப்பு பரவி உள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் படித்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல் முறையாக இந்த வைரஸ் பாதிப்பு தென்பட்டுள்ளது. வூஹானில் இருந்து திரும்பிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவுக்கு சென்று திரும்பிய சிலருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் இந்தியாவில் ஏற்கெனவே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்த வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் எட்டு பேர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பிரிட்டன் சௌத்ஹாம்ப்டன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவையின் அடிப்படையில் ஆராய்ந்தபோது கொரோனா வைரஸால் 30 நாடுகள் அதிகம் பாதிக்கப் படும் அபாயம் இருப்பதாகக் கூறப் படுகிறது.
இந்த 30 நாடுகள் பட்டியலில், தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் ஜப்பான், ஹாங்காங்கும், அமெரிக்கா ஆறாவது இடத்திலும் ஆஸ்திரேலியா 10வது இடத்திலும் பிரிட்டன் 17வது இடத்திலும் இந்தியா 23வது இடத்திலும் உள்ளன.
கொரோனோ வைரஸால் அதிகம் பாதிக்கப்படும் முக்கிய நகரங்கள் பட்டியலில் தாய்லாந்தின் பாங்காக் முதலிடத்தில் உள்ளது. ஹாங்காங் தைவானின் தைபே, சிட்னி, நியூயார்க். லண்டன் என நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக தலைநகர் பீஜிங்கில் வரும் பிப்.2ம் தேதி திருமண பதிவுகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. சீனர்கள் சாதகமான நாள் எனக் கருதும் பிப்.2ம் தேதி திருமணம் செய்வதற்கு பெருமளவில் மக்கள் திருமண பதிவுமையங்களை மொய்ப்பார்கள். அவர்களை வைத்து ஏராளமானவர்கள் கூடுவார்கள். இதனால் வைரஸ் தொற்று மேலும் பரவக் கூடும் என்பதால், இந்த வருடம் இந்தத் திருமணப் பதிவினையே ரத்து செய்துள்ளது பீஜிங் நகர் நிர்வாகம்.
மேலும், வருடந்தோறும் நடைபெறும் உள்நாட்டு கால்பந்து போட்டுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது சீனா.
அரசுத் துறைகள் கடந்து தனியார் மால்களுக்கும் இது போன்ற முடிவுகளை எடுத்து வருகின்றன. சீனாவின் மிகப் பெரும் ஃபர்னிசர் கடைகளான ஐகேஇஏ தனது 30 கடைகளை வைரஸ் அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.



