
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையான முன்னாள் முதல்வர் ராஜசேகர்ரெட்டியின் உடன் பிறந்த சகோதரர் விவேகானந்த ரெட்டி. இவர் ஒருங்கிணைந்த ஆந்திராவின் வேளாண்மை துறை அமைச்சராக பணியாற்றியவர்.
இந்நிலையில் விவேகானந்த ரெட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடப்பாவில் உள்ள தனது வீட்டில் வெட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, விவேகானந்தாவின் கொலை தொடர்பாக விசாரணை நடந்த சிறப்புக் காவல் படையை அமைத்தார்.

ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி, `இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி மாற்றம் அமைந்த நிலையில், தன் சித்தப்பா கொலை விவகாரத்தில் மீண்டும் வேறு ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார்.
அதிலும் முன்னதாக இருந்த கூடுதல் போலீஸ் டி.ஜி.பி-க்குப் பதிலாகக் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரை இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தார். ஜெகன்மோகன் ரெட்டி நியமித்திருந்த காவல்துறை குழுவிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதனால் விவேகானந்த ரெட்டியின் மகளும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான சுனிதா ரெட்டி, தன் தந்தை கொலை வழக்கில் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். சுனிதா, நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில், அவருடைய உறவினரும் கடப்பா எம்.பி-யுமான ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டி மற்றும் அவரின் தந்தை பாஸ்கர் ரெட்டி மீது சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தந்தை கொலை வழக்கில் தன் உறவினர்கள் சிலருக்கே தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் தெரிவித்துள்ளார். அவர்களில் ஜெகன்மோகன் ரெட்டியும் அடக்கம் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்ற பிறகு, எதற்காகத் தன் தந்தை கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வரும் என்று சொன்ன ஜெகன் மோகன் ரெட்டி, ஏன் ஆட்சிக்கு வந்த உடன் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவில்லை என்றும் சுனிதா கேள்வி எழுப்பினார்.
அத்துடன் தனது தந்தை மரணம் குறித்து இரண்டாவது எஸ்.ஐ.டி ஏன் அமைக்கப்பட்டது என்றும் இப்போது கூடுதல் போலீஸ் டிஜிபிக்கு பதிலாக காவல்துறை கண்காணிப்பாளரால் ஏன் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார். இதனால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



