
கிராம சபை கூட்டம் என்பது வலுப்பெற்ற ஒரு அமைப்பு.. கடந்த சில காலங்களில் தொய்வாக இருந்த கிராமசபை கூட்டம் இப்போது வீறு கொண்டு எழுந்து வருகிறது. சாங்கியமாக நடத்தப்பட்ட கூட்டம் இன்று கட்டாயமாக நடத்தப்பட்டு, மக்களிடம் நெருங்கி வருகிறது.
இந்த கிராம சபை கூட்டத்தில் ஒரு தீர்மானம் போட்டுவிட்டால் அதை எந்த சட்டத்தினாலும் எதுவும் செய்ய முடியாது. அந்த அளவுக்கு ஸ்ட்டிராங் ஆனது. மக்கள் இதன் மகத்துவத்தையும் புரிந்து கொண்டு வருவதால், அரசு அதிகாரிகள் தங்கள் பணிகளை தட்டிக்கழிக்காமல் செய்ய முடிகிறது!
இந்நிலையில், மதுரை அருகே மீனாட்சிபுரம் ஊராட்சியில் ஒரு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சஹானா என்ற 5-ம் வகுப்பு மாணவி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “எங்கள் பகுதியில் ஆரம்பப் பள்ளி மட்டும்தான் இருக்கு. ஆனால் உயர்நிலை பள்ளி இல்லை. 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்கூலுக்கு போய்தான் மாணவர்கள் படிக்க வேண்டி இருக்கு. அதுவும் நடந்துதான் போகிறோம். பஸ் வசதி இல்லை.

ஊருக்கு 2 முறைதான் பஸ் வருது. ஆனால் ஸ்கூல் டைமுக்கு வர்றது இல்லை. 7 கிமீ நடந்து போறதால, நேரத்துக்கும் ஸ்கூலுக்கு போக முடியறது இல்லை. எங்க ஊர் அக்காங்க ரொம்ப கஷ்டப்படறாங்க. பஸ் வசதி செய்து தந்தால் நல்லா இருக்கும். எனக்கு பிரச்சனை இல்லை. ஆனா அக்காங்க 7 கிமீ தூரம் நடந்தே போய் வர்றாங்க. திரும்பி வர்ற வழியில் பிராந்தி கடை இருக்கு. அதனாலதான் பஸ் வசதி வேணும்” என்றார்.
கிராம சபை கூட்டமே சஹானாவை ஆச்சரியமாக பார்த்தது.. ஏனென்றால், பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் பெரியவர்களே வாய் திறந்து கோரிக்கை வைக்க தயங்கும்போது, குட்டிப்பெண். அதுவும் எல்லோர் முன்னிலையிலும் பேசியது பாராட்டை பெற்றது. இந்த பேச்சு சோஷியல் மீடியாவிலும் வைரலானது. இந்த வீடியோவை மதுரை எம்பி சு.வெங்கடேசனின் பார்வைக்கும் போனது.

உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம், வெங்கடேசன் பேசினார். சஹானாவின் கோரிக்கை குறித்து விவாதித்தார். பிறகென்ன சஹானா கேட்டபடி பஸ் வசதி வரப்போவது உறுதியாகிவிட்டது. இந்த தகவலை சொல்வதற்காக வெங்கடேசன் நேரடியாக சஹானாவை தேடி ஸ்கூலுக்கு வந்துவிட்டார். மீனாட்சிபுரத்தில் தான் சஹானா படிக்கும் பள்ளி உள்ளது. கிளாஸ் ரூமுக்குள் நுழைந்தவர் அங்கிருந்த மாணவர்களிடம் பேசினார்.
“என்ன படிக்கிறீங்க எல்லாரும். நல்லா படிக்கணும். நீங்க நிறைய கேள்விகளை கேட்கணும். படிக்கக்கூடிய வசதிகளை தயங்காமல் எதுவானாலும் கேட்கணும். சொன்னாதானே யாராவது செய்ய முன்வருவாங்க.. அதனால் தைரியமா சஹானா மாதிரி கேள்வி கேட்க முன் வரணும், சரியா” என்றவர். சஹானாவை அழைத்து பேசினார். “நல்லா பேசினே..ம்மா” என்று பாராட்டி ஒரு பரிசையும் தந்தார். அந்த பரிசை பெறும்போது சஹானா கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தபடியே இருந்தது!



