
கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், இதன் ஒரு பகுதியாக, கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டினருக்கு வழங்கிய விசாவை இந்தியா ரத்து செய்துள்ளது.
சீனர்களும் இந்தியா வர தடை விதிக்கப் பட்டுள்ளதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட விசாவும் ரத்து செய்யப் பட்டுள்ளது. பிப்ரவரி 8 முதல் தில்லி – ஹாங்காங் இடையிலான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ், பல நாடுகளிலும் பரவி மக்களிடையே உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளும் இந்த வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ரஷ்யா, சீனாவுடனான தனது எல்லையை மூடியது. மேலும், தங்கள் நாட்டில் உள்ள வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப அந்நாடு முடிவு செய்துள்ளது. அது போல், இந்திய அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டுப் பயணிகள் அங்கிருந்து இந்தியா வருவதற்கு விசா கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், சீனர்கள் மற்றும் சீனா சென்ற வெளிநாட்டு பயணிகளின் வேலிட் விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.