தில்லி எஸ்.ஐ சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, ஒருதலைக் காதலால் கொலை செய்த சக எஸ்ஐ., தானும் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு தில்லியில் உள்ள பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ப்ரீத்தி அகலாவத் ( வயது 26). இவர் நேற்று இரவு பணி முடிந்து, ரோஹினி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை இன்னொரு உதவி ஆய்வாளரான தீபான்சு ரதி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அரியானா மாநிலம் கர்னால் அருகே காரில் தீபான்சு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். தீபான்சு ரதி சோனிபட்டைச் சேர்ந்தவர், ரோஹினியில் ஒரு வாடகை விடுதியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், இருவரின் உடல்களையும் கைப்பற்றிய தில்லி போலீசார் கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபான்சு, ப்ரீத்தியை ஒருதலையாக காதலித்து உள்ளார். தீபன்சுவை திருமணம் செய்து கொள்ள ப்ரீத்தி மறுத்து விட்டதால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.