லாரி மோதி நிறைமாத கர்ப்பிணி மரணம் அடைந்தார். அவரது வயிற்றில் இருந்த சிசு பத்து மீட்டர் தொலைவில் போய் விழுந்து இறந்தது. கம்மம் மாவட்டத்தில் நடந்த சோகம் இது.
கம்மம் மாவட்டம் பெனுபல்லி மண்டலத்தில் கோரமான விபத்து நிகழ்ந்தது. நிறைமாத கர்ப்பிணிக்கு எமனாக வந்தது ஒரு லாரி. கர்ப்பிணியின் வயிறு கிழிந்து வயிற்றில் இருந்த சிசு பத்து மீட்டர் தொலைவில் வயலில் வீசி எறியப்பட்டது.
வார்த்தைகளுக்கெட்டாத சோகம் அங்கே நிரம்பியது. இன்னும் சில நாட்களில் வீட்டுக்கு வாரிசு வரப் போகிறான் என்ற பெற்றோரின் ஆசையில் மண் விழுந்தது. மருத்துவமனையில் ரெகுலர் செக்கப் செய்து கொண்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது கோரமான சாலை விபத்து நேர்ந்ததில், வீட்டின் வாரிசுடன் மருமகளும் போய்விட்டாளே என்று கதறித் துடித்தனர் அந்தப் பெரியவர்கள்.
கணவருடன் பைக்.,கில் வந்த போது, பின்னால் இருந்து வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது. கர்ப்பிணிப் பெண் கல்யாணி கீழே விழுந்து லாரி சக்கரங்கள் அவள் மீது ஏறிச் சென்றதில், அந்தப் பெண்ணின் வயிறு கிழிந்து கர்ப்பத்தில் இருந்த சிசு பத்து மீட்டர் தொலைவில் வயலில் வீசி எறியப்பட்டது. சம்பவம் நடந்த இடம் அச்சமூட்டுவதாக மாறியது. பார்த்தவர்களின் கண்கள் சோகக் கண்ணீரால் நிறைந்தன.
கம்மம் மாவட்டத்தில் பிப்.12 புதன்கிழமை மதியம் இந்த கோர சம்பவம் நேர்ந்தது. பெனுபல்லி மண்டலம் ராமச்சந்திர பஞ்சாரா கிராமத்தைச் சேர்ந்த பலுசுபாடி முரளி, ஒன்பது மாதம் நிறைந்த கர்ப்பிணி மனைவி 20வயது கல்யாணியை புதன் காலை மண்டல ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பின் தம்பதிகள் இருவரும் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இன்னும் சில நிமிடங்களில் வீட்டைச் சென்று அடைந்து விட இருக்கையில் கிராம எல்லையில் கம்மத்திலிருந்து ராஜமண்டிரியை நோக்கிச் சென்று கொண்டிருந்த AP 31 TW 4689 நம்பர் கொண்ட லாரி வேகமாக வந்து பைக்கை பின்னால் இருந்து வேகமாக மோதியது.
விபத்து தொடர்பான புகைப்படங்கள் பார்க்க பரிதாபத்தை அளிக்கின்றன. விவரம் அறிந்து வந்த போலீசார் விசாரணை செய்தனர். லாரி டிரைவர் விபத்து நடந்த உடனே கீழே குதித்து ஓடிப் போனதாகத் தெரிகிறது. அந்தப் பெண் கல்யாணியின் கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.