இன்று: 13.02.2020: உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்க்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர் களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப் பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப் பட்டு வருகிறது.
மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். “நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை” எனப்படுபவர்.
நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல், ஸ்மார்ட்போன், ஐ.பேட் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், MASS MEDIA முன்னோடி வானொலி தான்.
முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பிப்ரவரி 13 இல் கொண்டாடப் பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.
யுனெசுக்கோ அமைப்பின் யோசனைப்படி, 2014ஆம் ஆண்டுக்கான உலக வானொலி நாளின் தொனிப்பொருளாக பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வானொலி மூலம் வலுவூட்டுவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரையான மனதின் குரல் – மன்கி பாத் என்பதன் தொடக்கத்தை விவரிக்கும் போது, நாட்டின் ஏதோ ஒரு மூலை முடுக்கெலாம் சென்று சேரும் வல்லமை வாய்ந்த வானொலியையே தனது குடிமக்கள் தொடர்புக்கான சாதனமாக தேர்வு செய்ததாகக் கூறினார். வானொலிக்கு அந்த மகிமையும் வலிமையும் உண்டு!
இன்று வானொலி தினம்… எனக்கும் வானொலிக்கும் தொடர்பு உண்டு. எனது வானொலி அனுபவத்தையும் குறிப்பிடத் தோன்றுகிறது.
சென்னை வானொலியில் ஏ, பி, எஃப்.எம் ரெயின்போ, எஃப்.எம்.கோல்ட் என்று இருக்கும் நான்கைந்து ஸ்டூடியோக்களில்… ஐந்து வருடங்களுக்கும் மேலாக அந்த அறிவிப்பாளர் நாற்காலியில் அமர்ந்து, முன்னே இருக்கின்ற ‘மைக்’கை சொந்தக் குழந்தைபோல் பாவனை செய்து கொஞ்சி,… கொஞ்சிக் கொஞ்சி…. கொஞ்சும் குரலில் பேசி… நல்ல தகவல்கள் நிறையச் சொல்லி… கிவாஜ.,வின் சிலேடைகள், அப்பப்போ தோணுகின்ற கவிதைகள், பாடல்களுக்கு கவிதைத்தனமான ரசனைச் சொற்கள் என்று… கலந்து கட்டிக் கொடுத்து… ஏதோ நம்மாலான பங்களிப்பையும் இந்த சமூகத்துக்கு அளித்தோம் என்ற திருப்தி இன்றைக்கு ஏற்படுகிறது.
இன்றும் சென்னை வானொலி ஆர்க்கிவ்ஸ்ஸில் நான் எடுத்த சில பேட்டிகள் உறங்கிக் கொண்டிருக்கும்.. வானொலிக்காக எழுதிக் கொடுத்த உரைச் சித்திரங்கள் எத்தனையோ பேரின் காதுகளுக்கு இனிமை சேர்த்திருக்கும்..
சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசையில் எழுதிய ஒலிப் பேழைகள், காஞ்சி மகாபெரியவருக்கு அமைக்கப்பட்ட ஓரிருக்கை மணிமண்டபம் குறித்த வானொலி ஒலிச்சித்திரம்…
காஞ்சி மகாபெரியவர் குறித்து எழுதிய உரைக் கோவைகள்…
நாச்சியார் திருமொழியை விளக்கி எழுதிய ஆறு மணிநேர
ஒலிப்பேழை… எல்லாம் என் நினைவலைகளில் இன்றும் பசுமையாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.!
நிறைய நல்ல நண்பர்களை எனக்கு அளித்ததும் சென்னை வானொலி நிலையம்தான்! மறக்க முடியாத மனிதர்கள் சிலர் உண்டு… முக்கியமானவர்… தென்கச்சியார்! நான் மஞ்சரி இதழாசிரியராக ”தென்கச்சி பதில்கள்” பகுதிக்கு சில நாட்கள் வானொலி நிலைய ஸ்டூடியோவில் இருந்து பேசிக் கொண்டே வாங்கி விடுவதும் உண்டு.
இதழுக்குத் தேவையான சில கட்டுரைகளை, மொழி பெயர்ப்புகளை வானொலி நண்பர்களே செய்து கொடுத்ததும் உண்டு… நல்ல இலக்கியத் தரமான நபர்களா? இசை வல்லுநர்களா..? வானொலி நிலையத்தில் வைத்து சந்தித்தது எனக்கு மிகப் பெரும் வாய்ப்பு! அகில இந்திய வானொலிக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
- செங்கோட்டை ஸ்ரீராம்