தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்க உள்ளன. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதில் முதல் நபராக இடம் பெறுகிறார்.
தில்லி மாநகராட்சியில் வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் தேசிய மக்கள்தொகை பதிவிற்கான பணிகள் துவங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பெயராக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பெயர் சேர்க்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு என வரிசைக் கிரமமாக பெயர்களும் விவரங்களும் சேர்க்கப்படவுள்ளன.
இதன் தொடக்க நாளில் மக்கள்தொகை கணக்கெடுப்புக் கழக ஆணையர் இப்பணியை தொடங்கி வைக்கிறார். அரசின் 3 துறைகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. குடியரசுத் தலைவர் குறித்த கணக்கெடுப்பு உள்துறை அமைச்சர் முன்னிலையில் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. கணக்கெடுப்பு கழக ஆணையர் தலைமையிலான குழு அதே நாளில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் பற்றிய விவரக் கேட்பு பதிவுகளை நேரில் சென்று ஆய்வு செய்யும்.
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு திட்டத்துக்கு தாங்களே முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் இல்லங்களுக்கும் நேரடியாகவே சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. மத்திய அமைச்சர்களின் வீடுகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது.
முன்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட இதே தேசிய குடிமக்கள் மக்கள்தொகை பதிவேட்டுக்கு இப்போது காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் அதிகாரிகள், அந்த மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேச உள்ளனராம்.