
புது தில்லி:
தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய தடை ஏதும் இல்லை எனவும் அது கூறியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். இதனால், ஆத்திரமடைந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கர்ணனுக்கு 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டுருந்தனர். ஆந்திர மாநிலம் தடா உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தலைமறைவாக உள்ளதால் கைது செய்ய முடியவில்லை.
இதனிடையே தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. மனுவை விசாரித்த அமர்வு, அவசரமாக விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. மனு எப்போது விசாரணைக்கு வருகிறதோ, அப்போது எடுத்துக் கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நீதிபதி கர்ணன் சார்பில் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், நீதிபதி கர்ணனை கைது செய்ய தடை ஏதும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் நீதிபதி கர்ணனின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது, முழுமையாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நீதிபதி கர்ணனை கைது செய்ய போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



