
சென்னை:
கருணாநிதிக்கு நடைபெறும் வைரவிழாவில் அவர் பங்கேற்க மாட்டார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி 1957-இல் குளித்தலை தொகுதியிலிருந்து சட்டப் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அதற்குப் பிறகு அவர் தோல்வியே அடையாமல் தொடர்ந்து சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.
கருணாநிதி சட்டமன்றத்தில் நுழைந்து அறுபது ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, அதனை பெரிய அளவில் கொண்டாட திமுக. ஏற்பாடு செய்து வருகிறது. கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சோனியாவுக்குப் பதிலாக ராகுல் இந்த விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தற்போது உடல்நலம் குன்றி, வீட்டிலேயே ஓய்வெடுத்துவருவதால், இந்த விழாவில் அவர் பங்கேற்பாரா என்று ஐயம் எழுந்தது. இருப்பினும் அவர் பங்கேற்பார் என சில நாட்களுக்கு முன்பாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவித்தார். இருப்பினும், அந்த நேரத்தில் மருத்துவர்கள் அனுமதித்தால் பங்கேற்பார் என்றார்.



