
புது தில்லி:
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம். அவர் மோடியை சந்திப்பதற்கு என்ன காரணம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்க, தான் சந்தித்த காரணத்தை பட்டியல் போட்டுக் கொடுத்துவிட்டார் ஓபிஎஸ்.
தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள், தேவைகள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து எடுத்துக் கூறினோம் என்று கூறிய அவர், விவசாயிகளின் வங்கிக் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாகக் கூறினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஓ.பன்னீர் செல்வம் அணி ஆதரவு அளிக்கும் என்ற தகவல் வெளியானது. ஆனால், பிரதமருடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், அரசியல் ரீதியாக அவரிடம் எதுவும் பேசவில்லை என்றார்.
தமிழக மக்களுக்கு இப்போதைக்கு என்ன தேவையோ அதனை அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பாக கோரிக்கை வைத்தோம் என்று கூறினார். அதாவது, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எடுத்து கூறினோம்; அரசியல் ரீதியாக பிரதமரிடம் எதுவும் பேசவில்லை.
தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயிகள் கடனில் சிக்கித் தவித்து வருகின்றனர். தேசிய வங்கிக்களில் விவசாயிகளின் வங்கிக் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம் என்று கூறினார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்ஸுடன், மைத்ரேயன் எம்பி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் உடன் சென்றனர். அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து மீண்டும் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றும் முயற்சியில் இரு அணி தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் மோடியைச் சந்தித்த எடப்பாடிக்கு அவர் முழு ஆதரவு அளித்தது போல் செய்திகள் வெளியாயின. இது ஓபிஎஸ் அணிக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த சந்திப்பு உடனடியாக ஏற்பாடு செய்யப் பட்டதாக வெளிவட்டாரத்தில் கூறப்பட்டது.



