‘
சென்னை:
நடிகர் ரஜினி காந்த், ரசிகர்களுடனான சந்திப்பில் பேசியபோது, மு.க.ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோர் குறித்தும் பேசினார். அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்புமாக கருத்துகள் எழுந்துள்ளன.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ரஜினி கருத்து குறித்துக் குறிப்பிட்டபோது, ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை ரஜினி புகழ்ந்தது ஏன்? அரசியல் மாற்றம் தேவை என ரஜினி பேசியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் மு.க.ஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி என்று பாராட்டி இருக்கிறார். தமிழகத்தில் அரசியல் கெட்டு விட்டதாக ஆதங்கப்படும் ரஜினி தி.மு.க.வை பாராட்டி இருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. ஊழலுக்குக் காரணமான ஸ்டாலினை, ரஜினி ஏன் புகழ்ந்தார் என தெரியவில்லை. போருக்கு தயாராவது அவ்வளவு எளிதல்ல. பிரதமர் மோடி குறித்து ரஜினி எதுவும் கூறாதது ஏன் என கூறியுள்ளார்.
இதனிடையே, பாமக., நிறுவுனர் ராமதாஸ் எப்போதும் கூறிவரும் கருத்தான, நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்லதல்ல என்பதைப் பிரதிபலிக்கும் வகையில், அன்புமணி ராமதாஸ் கூறியபோது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலுக்கு நிர்வாக திறன் கொண்டவர்தான் தேவை, நடிகர்கள் அல்ல என்று கூறியுள்ளார்.
இதனிடையே, ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதாரவி இது பற்றி கருத்து தெரிவித்த போது “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விரும்பினால் அதை வரவேற்கிறேன். தமிழக மக்களிடம் இருந்து அதிக பணம் மற்றும் புகழை அவர் சம்பாதித்துள்ளார். எனவே, அதை அவர்களுக்கே செலவு செய்ய அவர் தயாராக இருப்பதாக நினைக்கிறார். தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை” எனக் கூறினார்.



