
மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா, இன்று காலை தில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தையும் காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைத்தார்.
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில் ஆறு அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏ.,க்கள் என 16 பேர், மூன்று சிறப்பு விமானம் மூலம், மத்திய பிரதேசத்தின் போபால் நகரிலிருந்து புறப்பட்டு, பெங்களூருக்குச் சென்றனர். அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுனர்.
தற்போது, 24 எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் இன்று தில்லி சென்றார். பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அமித்ஷாவும் உடன் இருந்தார்.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த சிந்தியா, காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது என்றார்.

பின்னர், காங்கிரஸ் கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து ஜோதிர் ஆதித்யா சிந்தியா இன்று ராஜினாமா செய்து, கடிதத்தை அனுப்பியுள்ளார். அவர், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், “காங்கிரஸில் இருந்தால் நாட்டுக்கும் எனது மாநில மக்களுக்கும் பணியாற்ற முடியாது. முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் புதிய தொடக்கம் அவசியம். இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகுகிறேன். 18 ஆண்டுகளாக இக்கட்சியில் இருந்திருக்கிறேன். – தற்போது விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாகவே நான் இந்தப் பாதையில் இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசத்தை பொறுத்தவரை மொத்தம் 230 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 116 பேர் ஆதரவு தேவை. தற்போது ஆளும் கட்சியில் 114 எம்எல்ஏ.,க்கள் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சியினர் 2 பேர் என காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது
அதே நேரம், பாஜக.,வில் 107 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். தற்போது அதிருப்தியில் உள்ள 24 பேர் பாஜக.,வுக்கு ஆதரவு அளித்தால் இங்கு பாஜக, ஆட்சி அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ம.பி.யில் 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று தெரிகிறது. அதே நேரம் ஆட்சியமைக்க 105 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தாலே போதும் என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 107 எம்.எல்.ஏக்கள் கைவசம் இருப்பதால், ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு பாஜக,வுக்கு ஏற்பட்டுள்ளது.
*மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்த பின் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் உள்ளனர். இதற்கிடையில் முதல்வர் கமல்நாத் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.



