ராமேசுவரத்தில் இருந்து ரயிலில் சொந்த ஊர் திரும்பும் வழியில் தூக்கத்தில் தாய்ப்பால் குடித்த 5 மாத ஆண் குழந்தை மூச்சுத் திணறி இறந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் லால்பேட் கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் ஷா(36). கார் ஓட்டுநராக வேலை செய்துவரும் இவரது மனைவி பிரியங்கா(30). திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தைப் பேறு இல்லாதிருந்ததால் நாட்டின் பல்வேறு கோயில்களுக்கும் சென்று வேண்டிக் கொண்டனர்.
இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைப் பேறு கிடைத்ததையடுத்து, அமித் ஷா தனது குடும்பத்தினருடன் ராமேசுவரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, அங்கிருந்து நேற்று முன்தினம் ராமேசுவரம்- பைசாபாத் விரைவு ரயிலில் சொந்த ஊருக்குப் புறப்பட்டார்.
ரயிலில் வரும்போது, நேற்று அதிகாலை தூங்கிக்கொண்டே பிரியங்கா தன் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டியுள்ளார். அப்போது மூச்சுத்திணறி குழந்தை இறந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை அந்த ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, குழந்தை அசைவற்றுக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, குழந்தையை தூக்கிச் சென்று ரயில் நிலையத்தில் உள்ள மருத்துவர்களிடம் காட்டினர்.
குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுத்திணறி ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதையறிந்த அமித் ஷா குடும்பத்தினர் கதறி அழுதனர்.
பின்னர், கும்பகோணம் இருப்புப்பாதை காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் கும்பகோணம் பெருமாண்டி சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்தனர்.
நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குழந்தையுடன் மகிழ்ச்சியாக வந்த அமித் ஷா குடும்பத்தினர், குழந்தை இல்லாத நிலையில் சோகத்துடன் வேறு ரயிலில் மத்திய பிரதேச மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.