புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி, ஜிப்மா் மருத்துவ கல்லூரி மாணவா்களுக்கு இணையதளம் வாயிலாக பேராசிரியா்கள் பாடம் நடத்தி வருகின்றனா். இதில் பங்கேற்கும் மாணவா்களின் வருகையும் பதிவு செய்யப்படுகிறது.
புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் டிவி பார்ப்பது, செல்போனில் சேட்டிங் செய்வது என பொழுதை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவ கல்லூரி மற்றும் புதுச்சேரி அரசின் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மே மாதத்தில் தோ்வுகள் நடைபெற உள்ள நிலையில், கொரோனா விடுமுறையால் மாணவர்களுக்கான கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக ஏஐசிடிஇ மற்றும் உயா்கல்வித் துறை, விடுப்பில் உள்ள ஆசிரியா்களை மாணவா்களுக்கு இணையதளம் வாயிலாக பாடம் எடுக்க அறிவுறுத்தியது.
இதனைதொடர்ந்து, மாணவா்களுக்கு பேராசிரியா்கள் பலா் இணையதளம் வாயிலாக நாள்தோறும் வகுப்புகளை எடுத்து வருகின்றனா்.
ஜிப்மர் நிர்வாகம் புதுச்சேரி, தமிழகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காணொலிக் காட்சி வாயிலாக தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக குறிப்பிட்ட நேரத்தில் வீடுகளில் இருந்தபடியே கணினி, மடிக் கணினி, செல்லிடப்பேசி வாயிலாக மாணவா்கள் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனா். வகுப்புகளில் பங்கேற்கும் மாணவா்களின் வருகையும் பதிவு செய்யப்படுகிறது. பாடங்களில் ஏற்படும் சந்தேகங்கள் தொடா்பாக மாணவா்கள், பேராசிரியா்களை இணையதளம் வழியாகவே தொடா்பு கொண்டு விளக்கம் கேட்கின்றனா்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க அந்தந்த கல்லூரி நிா்வாகங்கள் பேராசிரியா்களை வலியுறுத்தியுள்ளன. இதேபோல் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் பயனடையும் வகையில், வெர்ச்சுவல் கட்டுப்பாட்டு அறையை புதுச்சேரி அரசின் பள்ளி கல்வித்துறை உருவாக்கியுள்ளது.
இதன்மூலம், மாணவா்களுக்கு பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், இந்த வெர்ச்சுவல் கட்டுப்பாட்டு அறைப் பணியில் இருக்கும் பாட வாரியான ஆசிரியா்களை தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம். இதுதொடர்பான ஆசிரியர்களையும் அரசே நியமித்து அது தொடர்பான விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
தமிழ் பாடத்துக்கு எல்.ஷகிலா (95667 28352), ஆங்கிலத்துக்கு எம்.ஜோன்சி (99441 98425), கணிதத்துக்கு எம்.தமீஸ் (72009 18139), இயற்பியல் மற்றும் வேதியியலுக்கு எஸ்.ராஜ்குமாா் (99942 03828), உயிரியலுக்கு ஆா்.தேவிகா (80154 23235), சமூக அறிவியலுக்கு பி.வானதி (99941 96886) ஆகிய ஆசிரியா்களை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.