புது தில்லி:
மிருகவதைக்கு எதிராக புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதன்படி, நாடு முழுதும் இறைச்சிக்காக மாடுகள், காளை, எருமை, பசுமாடு, ஒட்டகம் ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நோக்கில் மாடுகளை விற்கக் கூடாது. விவசாயிகள் மட்டும் சந்தைகளில் மாடுகளை விற்கலாம்.

கருவுள்ள பசுக்களை வாகனங்களில் அடைத்துக் கொண்டு செல்லக் கூடாது. சந்தைக்கு கால்நடைகள் கொண்டு செல்லப் படும்போது துன்புறுத்தக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் புதிய அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து இந்தப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் படி,
இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது. சந்தைகளில் விவசாயத் தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்கவோ, வாங்கவோ செய்யலாம்.
கசாப்புக் கடைகள், இறைச்சி தேவை கருதி பசு, ஒட்டகம், காளை, எருமை மாடுகளை வாங்கவோ, விற்கவோ கூடாது.
வயதில் குறைந்த கால்நடைகளை சந்தைக்குக் கொண்டுவரக் கூடாது. இவற்றை சந்தைக்குக் கொண்டு வருவோர் அதன் உரிமையாளர் கையெழுத்துடன் கூடிய ஒப்புதலுடன் வர வேண்டும். விலங்கின் உரிமையாளர் முகவரி, போட்டோ அடையாள அட்டை நகல் ஆகியவை அவசியம்.
கால்நடையின் அடையாளங்களை தெரியப்படுத்த வேண்டும்
இறைச்சித் தேவைக்காக கால்நடை சந்தைக்குக் கொண்டுவரப்படவில்லை என உறுதிப்படுத்த வேண்டும்.
கால்நடையை வாங்குபவரின் அடையாள அட்டை நகல், முகவரி உள்ளிட்ட விவரம் கொடுக்கப்பட வேண்டும்.
விவசாயத் தேவைக்காகவே கால்நடை வாங்கப்படுகிறது என்ற தகவலை உறுதி செய்யத் தேவைப்படும் ஆதாரங்களைப் பெறவேண்டும்
கால்நடையை வாங்குவோர் அடுத்த 6 மாத காலத்திற்குள் அதை விற்பனை செய்யமாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும். அடுத்த ஆறுமாத காலத்துக்கு அந்த ஆவணங்களைப் பராமரிக்க வேண்டும். சோதனை செய்யும் அதிகாரியிடம் இந்த ஆவணங்களை தேவைப்படும் போது காட்ட வேண்டும்.
கால்நடையை வாங்கியவர் அதை இறைச்சிக்காக கசாப்புக்கடைக்கு விற்பனை செய்யக் கூடாது. மாநில அரசின் கால்நடை பாதுகாப்பு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.
மதம் தொடர்பான விழாக்களில் இந்தக் கால்நடைகளை (மாடு, எருமை, ஒட்டகம், காளை) பலியிடக்கூடாது.
மாநில அரசின் சட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வேறு மாநிலங்களுக்கு இந்தக் கால்நடைகளை விற்பனை செய்யக் கூடாது.
கால்நடை சந்தையில் நடைபெறும் விற்பனையின்போது அதுகுறித்து 5 நகல்கள் எடுத்து வைக்கப்பட வேண்டும்.
ஒன்று விற்பனையாளரிடமும், இரண்டாவது வாங்கியவரிடமும், 3வது நகல் வாங்கியவர் வாழும் தாலுகா அலுவலகம், 4வது நகல் மாவட்ட தலைமை கால்நடை அலுவலர், 5வது நகல் கால்நடை சந்தை கமிட்டியிடம் என ஐந்து நகல்கள் இருக்க வேண்டும்.



