
புது தில்லி:
தில்லி மாநில அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. இவர், தில்லி முதல்வர் கேஜ்ரிவால் மீது அடுத்தடுத்து பல்வேறு புகார்களை பகிரங்கமாகக் கூறினார். இதனால் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், சக அமைச்சர் ஒருவரிடம் இருந்து கேஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம்சாட்டினார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் தில்லி மாநில அரசு மீது மேலும் சில புகார்களை அவர் கூறினார்.
இது தொடர்பாக கபில் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசும்போது, “தில்லி மாநில அரசின் மருத்துவமனைகளுக்கு மாநில சுகாதாரத்துறை ரூ.300 கோடிக்கு மருந்துகளை கொள்முதல் செய்தது. இவற்றை அரசு மருத்துவமனையின் மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்காததால் அவை காலாவதியாகி விட்டன. இதேபோல் சுகாதாரத்துறையில் பணி நியமனங்கள், பணியிட மாறுதல் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இந்த 3 புகார்களின் மீதும் விரைவில் வழக்குப்பதிவு செய்வதற்கான உத்தரவுகளைப் பெறுவேன்” என்றார்.



