
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நேற்று நடைபெற்ற இரு வேறு துப்பாக்கிச் சண்டையில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி சப்ஸர் பாட் உயிரிழந்தார்.
சப்ஸர் பாட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரின் தெற்கு, மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் வன்முறைகளை தடுக்கவும் அங்கு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனந்த்நாக், புல்வாமா, சோபியான் நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
முன்னர், தெற்கு காஷ்மீரில் மறைந்திருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்ஹான் வானியை கடந்த ஆண்டு ஜூலை 8-ம் தேதி பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரிவினைவாத அமைப்புகள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டன. இதனால் பல மாதங்களாக காஷ்மீரில் வன்முறை நீடித்தது.
புர்ஹான் வானியை அடுத்து ஹிஸ்புல் முஜாஹிதீன் புதிய தளபதியாக சப்சார் அகமது பட் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் பயங்கரவாதிகள் பல்வேறு சதித் திட்டங்களை கட்டவிழ்த்து விட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் காஷ்மீரின் டிரால் பகுதியில் உள்ள சொய்மோ கிராமத்தில் சப்சார் உள்பட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் முகாமிட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். நேற்று அதிகாலை வரை நீடித்த இந்த சண்டையின்போது ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி சப்சார் அகமது பட் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பாரமுல்லா மாவட்டத்தில், ராம்பூர் என்ற இடம் அருகே எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகளின் சதித் திட்டத்தை எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே சப்சார் அகமது பட் கொல்லப்பட்ட தகவல் பரவியதும் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் மற்றும் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கனாபால் உள்பட தெற்கு காஷ்மீரில் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் நடை பெற்றன. அவர்களை பாதுகாப்புப் படையினர் விரட்டி அடித்தனர். எனினும் பீதியடைந்த பொதுமக்கள் பலர் அலுவலகங்களில் இருந்து அவசரமாக வீடு திரும்பினர். பள்ளிகளும் முன்கூட்டியே மூடப்பட்டு மாணவர்கள் வீடு திரும்பினர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. வதந்தியை தடுப்பதற்கு இந்தப் பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நாளை திங்கள்கிழமை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிவினைவாதிகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமையன்று முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் காஷ்மீரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.



