ஊரடங்கு நீட்டிப்பா? நாளை காலை 10 மணிக்கு… உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
modi speech - 2026

21 நாள் ஊரடங்கு நாளையுடன் முடிகிறது. இந்த நிலையில், நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. அப்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அவர் அரசின் முடிவினை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் கிருமி சீனாவின் வூகான் நகரில் இருந்து வெளிக்கிளம்பி, உலகம் முழுதும் பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்து தங்களுக்குத் தெரிந்த சரியான தகவலை சீனா வெளி உலகுக்குத் தெரிவிக்கவில்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவைக் குற்றம் சாட்டுகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒருபடி மேலே போய், கொரோனா வைரஸை சீன வைரஸ் என்றே அடையாளப் படுத்தினார். காரணம், அமெரிகாவில் தான் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

கொரோனா வைரஸ் சற்று மெதுவாக, இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் சிலர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறி, இந்தியா முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

கடந்த 25 ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அப்போது அறிவித்தார். தற்போது அந்த 21 நாள் ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

ஏப். 11ம் தேதி சனிக்கிழமை அன்று, ஊரடங்கு நிலவரம், மாநிலங்களில் நிலவும் பிரச்னைகள், அத்தியாவசியப் பொருட்கள் சப்ளை ஆகியவை குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ-கான்பிரன்ஸ் மூலம் விவாதித்தார். இதில் பல மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதை அடுத்து, ஏப்.11ஆம் தேதி இரவு 8 மணிக்கே பிரதமர் மோடி இது குறித்து உரை நிகழ்த்துவதாகக் கூறப்பட்டது. ஆனால் அது உறுதிப் படுத்தப் படவில்லை என்று தெரிவிக்கப் பட்டது. அந்நேரம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தன. தொடர்ந்து மேற்கு வங்கம், மஹாராஷ்ட்டிரம் ஆகிய மாநிலங்களும் வரும் ஏப்.30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தன.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஊரடங்கை நீட்டிக்கவேண்டும் என்று அப்போது பிரதமரிடம் தெரிவித்ததாக செய்தி வெளியானது. அதே நேரம் கொரோனா பாதிப்பு மாவட்டங்களை பாதிப்பின் அடிப்படையில் மூன்றாகப் பிரித்து, அங்கே ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று கூறப் பட்டது.

இந்நிலையில், நாளை பிரதமர் மோடி நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்து தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.