
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், யூனிசெஃப் அமைப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் நோய் ஒரு தொற்று நோயாக அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 11 முதல் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் இந்தப் பிறப்பு எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் முடங்கிக் கிடக்கும் நிலையில், கர்ப்பிணிகள் பிறக்கும் குழந்தைகளின் உடல்நலம் குறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யூனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் முழு கவனமும் இருப்பது இதற்கு ஒரு காரணமாகும்.
மேலும், மருத்துவமனைகளில் உள்ள உபகரணங்களும் கொரோனா நோயாளிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதால், கர்ப்பிணிகள் மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கான மருத்துவ உபகரணங்களின் அவசியம் கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த & வசதியான நாடுகளில் கூட இந்தப் பிரச்சனை உள்ளது.
வரும் 10ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடவுள்ள நிலையில், புதிதாகப் பிறக்கும் 20 கோடி இந்தியக் குழந்தைகளின் தாய்மார்கள் முழு கவனத்துடன் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்த மார்ச் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவு குழந்தைகள் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 9 மாதங்களில் சீனாவில் 1.35 கோடி குழந்தைகளும், நைஜீரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகளும் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.