
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ‘கேரளத்தில் தொடர்ந்து 2-வது நாளாக, யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை’ என்று அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறியிருப்பதாவது:
”கேரளத்தில் மே 7-ம் தேதி யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை. கடந்த சில தினங்கள் கேரளத்துக்கு நல்ல நாட்களாக அமைந்துள்ளன. கடந்த மே 1, 3 ,4 ,6 மற்றும் 7 ஆகிய 5 தேதிகளில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். மே 7-ம் தேதி 5 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கண்ணூர் மாவட்டத்தில் 3 பேரும், காசர்கோடு மாவட்டத்தில் 2 பேரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதுவரை 474 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். தற்போது 25 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் 16,693 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 16,383 பேர் வீடுகளிலும், 310 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். நேற்று (வியாழன்) கொரோனா அறிகுறிகளுடன் 131 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 35,171 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 34,519 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.
இதுதவிர சுகாதாரத் துறையினர், வெளி மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் அதிகமுள்ளவர்களில் 3,035 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 2,337 பேருக்கு நோய்த் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. கேரளத்தில் இன்று புதிய நோய் தீவிரமுள்ள பகுதிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. அதே சமயத்தில் இந்தப் பட்டியலிலிருந்து 56 பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது கேரளத்தில் நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் 33 மட்டுமே”. இவ்வாறு சைலஜா தெரிவித்துள்ளார்.



