
கொரோனா எனும் கொடிய அரக்கன் இப்போது உலகையே ஆட்டிப் படைக்கிறது. இதில் அகப்பட்டு எளியவர்கள் பலர் அல்லாடுகிறார்கள். அன்றாடம் உணவுக்காக உழைத்துக் களைத்தவர்கள், இப்போது உணவு கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். அத்தகையவர்களுக்கு சில நல்லுள்ளங்கள் தங்கள் திறனுக்கு ஏற்ப உணவுகளை சமைத்து அளித்து வருகிறார்கள். பசித்தோர்க்கு உணவு அளித்தல் தெய்வத்துக்கு ஆற்றும் கடமையினும் பெரிது என இந்த நாட்டின் புராண இதிகாசங்களும் சான்றோரின் வாழ்க்கையும் வலியுறுத்துகின்றன.
இந்த வீடியோவில் உள்ள கனபாடிகள் தெனாலியைச் சேர்ந்தவர். இவர் மற்றும் சில பிராமண நண்பர்களோடு சேர்ந்து தன் வீட்டில் தினமும் கொரோனா லாக்டௌன் தொடங்கிய நாள் முதல் இன்று வரை தொடர்ந்து பசியோடு இருக்கும் பலருக்கும் அனைத்து உணவு வகைகளோடும் கூடிய சம்பூரணமான போஜனத்தை தன் சொந்த செலவில் சமைத்து எடுத்துச் சென்று அளித்து வருகிறார்.
போலீஸ் அதிகாரிகளோடு கூட அனைவருக்கும் தினமும் மத்தியானம் சாப்பாடும், ராத்திரி பலகாரமும் சமைத்து எடுத்துச் சென்று அளித்து வருகிறார்கள். தம்மைப் பற்றி அவர்கள் இதுவரை எந்த சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் செய்து கொள்ளவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
ஆந்திர பிரதேஷ் தெனாலி நகரம் அனேக கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் புகழ் பெற்றதோடு கூட வேத பண்டிதர்களுக்கும் புகழ்பெற்றது. இங்கிருந்து வேத பண்டிதர்கள் நம் இந்திய நாடெங்கும் சென்று புகழ் அடைந்துள்ளார்கள். அவர்களுள் விஷ்ணு பட்லு என்பவர் முக்கியமானவர். ஸ்ரீமான் விஷ்ணு பட்லு ஸ்ரீராமச்சந்திர பௌண்டரீக யாஜுலு அவர்கள்.
அவருடைய மூத்த புதல்வர் ஸ்ரீமான் ஆஞ்சநேய சயணுலு. அவருடைய இரு புதல்வர்கள் ஸ்ரீமான் யக்ய ராமகிருஷ்ண பௌண்டரிக யாஜுலு ( ராமையா), ஸ்ரீமான் யக்ய நாராயணா. இவர்கள் சோம யாகம், பாக யாகம், பௌண்டரீக யாகம் போன்று எத்தனையோ யக்யங்களை நம் பாரத நாட்டின் பல இடங்களிலும் நிர்வகித்து வேத தர்ம பிரதிஷ்டைகயில் முன்னின்றுள்ளார்கள். வேத தர்ம பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஸ்ரீராமாயண நவாஹ்னிக ஞான யக்ய டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர குருபாதுகா பீடம் தலைமையில் பிரம்மஸ்ரீ வேத மூர்த்திகளான ஸ்ரீமான் விஷ்ணுபட்லு ஆஞ்சநேய சயணுலு அவர்கள் தலைமையில் பல சபைகள், ஆன்மீக, சந்தர்ப்பண நிகழ்ச்சிகள் நாட்டின் பல இடங்களிலும் நடந்துவருகின்றன.
உலகத்தை நடுங்க வைக்கும் கொரோனா பரவலின் பின்னணியில் கடந்த 25 நாட்களாக நாடெங்கிலும் லாக்டௌன் நடந்துள்ளது.
இந்த சமயத்தில் தெனாலி நகரத்தில் இவர்கள் கடந்த 25 நாட்களாக சமையல் சமைத்த படியே உள்ளார்கள். தினமும் சுமார் 1000 பேருக்கு மேலாக ஏழை மக்களுக்கு, ஏழை மக்கள் வசிக்கும் காலனி களுக்கு சென்று சுயமாக உணவு அளித்து வருகிறார்கள். இந்த மகா அன்னதான சந்தர்ப்பண நிகழ்ச்சியில் அவருடைய குடும்ப அங்கத்தினர்களோடு கூட பத்து பேர் சமையல் செய்பவர்களும் பங்கு பெறுகிறார்கள்.
பரமாத்மாவுக்கு சமர்ப்பிக்கப்படும் ஹவிஸ்ஸு போன்று இந்த தரித்ரநாராயணர்களாகிய ஏழைகளுக்கு இவர்கள் செய்யும் சந்தர்ப்பணம் அந்த பரமாத்மாவுக்கு திருப்தி அளிக்கும் என்று கூறுவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

தினம் ஒரு மெனு. இந்த மெனுவை எழுதும்போதே இதில் எத்தனை சிரமம் இருக்கும் என்பது புரிகிறது.
சென்ற வெள்ளிக்கிழமை 150 கிலோ மாவால் செய்த மைசூர் போண்டா. தக்காளி பச்சைமிளகாய் கொத்தமல்லி போட்டு செய்த சட்னி அம்பது கிலோ. வெள்ளிக்கிழமை அன்று ஏழைகளுக்கு அளித்த ஸ்னாக்ஸ் இது.
ஏப்ரல் 16: இரண்டு குவின்டால் அரிசி, எண்பது கிலோ கத்திரிக்காய் சௌசௌ இஞ்சி பச்சை மிளகாய் போட்டு செய்த பொரியல். சுரக்காய் தக்காளி பரங்கிக்காய் வெண்டைக்காய் புதினா கொத்தமல்லி புளி துவரம் பருப்பு போட்டு செய்த சாம்பார். நெய்யோடு கூட விநியோகித்து உள்ளார்கள்.
ஏப்ரல் 15: ரெண்டு குவிண்டால் அரிசி, 50 கிலோ தக்காளி தோசக்காய் இவை போட்டு செய்த பருப்பு, அவற்றோடு கூட கருவடாம் வடகம் வினியோகம்.
ஏப்ரல்14: 300 கிலோ முட்டைகோஸ் போட்டு செய்த பக்கோடா.
ஏப்ரல் 13: 150 கிலோ கதம்பசாதம், 30 கிலோ அரசி ரவையால் செய்த கொழுக்கட்டைகள்.
ஏப்ரல் 11: 108 கிலோ உளுத்தம் பருப்பால் செய்த மெது வடைகள். வீட்டில் நான்கு பேருக்கு செய்தாலே ஒரு பெரிய யாகம் போலிருக்கும். 108 கிலோ என்றால் வடைகளை நினைத்துப்பாருங்கள்.
ஏப்ரல் 6: ஆயிரம் எண்ணிக்கையில் ஜிலேபி, பூரி, உருளைக்கிழங்கு கறி வினியோகம்.
பிராமணர்கள் சாப்பிடுவதற்கு மட்டுமே லாயக்கு என்று சில மேதாவிகள் ஏளனம் செய்வது வழக்கம். ஆனால் விஷ்ணு பட்லு குடும்பத்தாரின் தான தர்ம குணம் அந்த ஏளனத்தையே ஏளனம் செய்வது போல் உள்ளது.

இத்தகைய மகா காரியத்தை சுயநலமின்றி, புகழுக்காக அன்றி, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நிர்வகித்து வரும் அவருடைய குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் நாம் வணக்கம் தெரிவிப்போம்.
சிறிய குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் அவர்கள் காலனிக்கு சென்று குல மத வித்தியாசமின்றி அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு அன்போடும் கருணையோடும் இத்தகைய மகா யக்யத்தை செய்துவரும் மனிதாபிமானம் மிக்க விஷ்ணு பட்லு குடும்பத்தாரை பாராட்டுவோம்.
மனிதாபிமானம் அற்ற மதவெறி பிடித்தவர்கள், சுயநல அரசியல்வாதிகள் போன்றோரால் களங்கமடைந்த இன்றைய சமுதாயத்தில் யக்ய, யாகங்களை நிர்வாகத்து வருபவர்களும், நித்ய அனுஷ்டானத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் ஆன இவர்கள் இந்த கடினமான நேரத்தில் மிகச் சிரமத்தோடு செய்து வரும் இந்த சுயநலமற்ற சேவை ‘மானுட சேவையே மாதவ சேவை’ என்பதை நிரூபிக்கிறது.
இவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். இது போன்ற நற்செயல்கள் பலருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இதனை நாங்கள் வெளியிடுகிறோம். தவிர அவர்கள் இதுகுறித்து எந்த ஒரு சமூக தளத்திலும் வெளியிடுவதை அவர்கள் விரும்பவில்லை. பெருமைக்காக இதைச் செய்யவில்லை என்றே கூறுகிறார்கள்.
- ராஜி ரகுநாதன், ஹைதராபாத்



