
துணை ராணுவத்தினருக்காக செயல்படும் கேன்டீன்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுதேசிப் பொருட்களை மட்டுமே விற்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
துணை ராணுவப்படையில் சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி, என்எஸ்ஜி மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் அடங்குவார்கள். இவர்களுக்காக செயல்படும் கேன்டீன்களில் ஆண்டுதோறும் 2 ,800 கோடி அளவுக்கு விற்பனை இருக்கும். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
நாடு சுயசார்புள்ளதாக மாற வேண்டும். உள்நாட்டில் தயாரிப்பு பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இது நிச்சயம் வருங்காலத்தில் சர்வதேச தலைமைக்கு இந்தியாவை அழைத்து செல்லும்.
இதன் அடிப்படையில், துணை ராணுவத்தினருக்கான கேன்டீன்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வரும் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 10 லட்சம் துணை ராணுவப் படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 50 லட்சம் பேர் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவார்கள்.
நாட்டு மக்களும் உள்நாட்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துவதுடன், மற்றவர்களையும் அதனை செய்ய வலியுறுத்த வேண்டும்…. என்று குறிப்பிட்டிருக்கிறார்.



