
ஏப்ரல் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்க உதவித் தொகை வழங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது குறித்து அவர் பதிவு செய்திருப்பதாவது…
ஏப்ரல் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவி தொகையாக ரூ.1000 வழங்கிடவும், ஏப்ரல்-ஜூன் முடிய விலையில்லா கூடுதல் அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கிடவும் வழக்கமாக வழங்கப்படும் உணவு மானியத்தை விட கூடுதலாக ரூ.3108.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. #TNGovt
முன்னதாக, இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொலி உரையாடல் மூலம் பேசினார் அப்போது, மே மாதத்தை போல ஜூன் மாதத்திலும் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் உணவுத்துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கே.காமராஜ் தனது டிவிட்டர் பதிவுகளில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அவை…
கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் 845 கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 2,92,912 குடும்ப அட்டைதாரர்களில், இதுவரை 2,16,120 குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2019 – ஏப்ரல் 2020 வரை புதிய குடும்ப அட்டைகள் பெற அங்கீகரிக்கப்பட்டு, இதுவரை குடும்ப அட்டை வழங்கப்பெறாமல் உள்ள 71,067 குடும்பங்கள் குறுஞ்செய்தி மூலம் தகவல் பெறப்பட்ட குடும்ப அட்டை குறியீட்டு எண், ஆதார் எண், கைபேசி எண்ணில் ஒன்றை காண்பித்து பொருட்களைப் பெற்று வருகிறார்கள்.
விலையில்லா பொருட்கள் ஏப்ரல் மாதத்தில் 96.30% குடும்ப அட்டைதாரர்களுக்கும், மே மாதத்தில் நாளது தேதி வரை 73.37% குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை ரூ.655.63 கோடி மதிப்பில் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் முன்னுரிமை அல்லாத (NPHH) குடும்ப அட்டைதாரர்களுக்கும் நபர் ஒன்றுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கிட, ரூ.438.00 கோடி ஒதுக்கப்பட்டு, 3 நபர்களுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது அவர்கள் பெற்று வரும் அரிசி இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவித் தொகையாக தலா ரூ.1000 வீதம் வழங்க ரூ. 2014.70 கோடி ஒதுக்கப்பட்டு, 98.77% குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ரொக்க உதவித் தொகை வழங்கப்பட்டு விட்டது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உறுதியான நடவடிக்கைகள் காரணமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் இதுவரை 3,76,606 விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைந்துள்ளனர்.
விற்பனை செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை ரூ.4,257.73 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 22.51 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 6 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அளவானது நெல் கொள்முதல் வரலாற்றில் கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்ட அதிகபட்ச நெல் கொள்முதல் அளவை விட 20% கூடுதலாகும்
கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்கும் பொருட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
24.3.2020-லிருந்து 11.5.2020 வரை (49 நாட்கள்) 2,87,004 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.