
நாடு முழுவதும் ரயில்வே நேர அட்டவணையில் உள்ளபடி இயங்கும் ரயில்கள் அனைத்தையும் ஜூன் 30ஆம் தேதி வரை ரத்து செய்ய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து 4 வது லாக்டவுன் அமல்படுத்தப் படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கும் நிலையில், நாடு முழுவதும் இயங்கி வந்த 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம் 13,100 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதை அடுத்து வரும் ஜூன் 12ஆம் தேதி முதல் படிப்படியாக ரயில் சேவை தொடங்கும் என்று அறிவித்திருந்தது. இதை அடுத்து, தில்லியில் இருந்து இயங்கும் சிறப்பு ரயில்கள் சேவை என 15 சிறப்பு ரயில் சேவைகளும் அறிவிக்கப் பட்டு ஐஆர்டிசி இணையதளம் மூலம் முன்பதிவும் தொடங்கப்பட்டது. முன்பதிவு தொடங்கப்பட்ட மாலை நேரத்தில் அந்த இணையதளமே முடங்கியது. அந்த அளவுக்கு லட்சக்கணக்கானோர் அந்த நேரத்தில் முண்டியடித்து அந்த ரயில்களில் பயணம் செய்ய காத்திருந்தனர்
இந்நிலையில் ரயில்வே கால அட்டவணைப்படி ஜூன் 30ஆம் தேதி வரை இயங்கும் ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை முழுமையாக திருப்பித் தரும்படி ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் முன்பதிவு செய்யும் வசதியுடைய பயணிகள் ரயில்கள் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை இயங்காது என்று தெரிகிறது! இருப்பினும் மாநிலங்களை விட்டு இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
