டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை கோரிய மனுக்கள், விசாரணைக்கு உகந்ததல்ல என்று, டாஸ்மாக் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது!
டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்குகளை தள்ளபடி செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் மனுவில் கோரப் பட்டிருந்தது. மதுக் கடைகள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில் டாஸ்மாக் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மதுக் கடைகள் திறப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக் நிறுவனம் அந்த பதில் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, உயர் நீதிமன்றம் அனுமதித்த கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கவில்லை என்றும், அவை கொரோனா பரப்பும் மையங்களாக மாறியுள்ளன என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன. மேலும், உயர் நீதிமன்றம் அனுமதித்த அளவைக் காட்டிலும் அதிக அளவில் மது பாட்டில்களை பலர் வாங்கிச் சென்றனர் என்றும் கூறப்பட்டது. இது தொடர்பாக சில அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்நிலையில், மதுக்கடைகளில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.