
கர்நாடாகாவில் திருமண நிகழ்ச்சிகளுக்காக வெள்ளியில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த 4ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளனர். திருமணங்கள், இறுதி சடங்குகள் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே மக்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. 20 முதல் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

இந்நிலையில் திருமணத்தின் போது மணமக்கள் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக வெள்ளியில் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த நகை வியாபாரி சந்தீப் சகோங்கர் தான் அதனை தயாரித்து வருபவர். இது குறித்து பேசிய அவர், கொரோனாவால் அனைத்து தொழில்களை போன்று தனது தொழிலும் பாதிக்கப்பட்டதாகவும். எனவே இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வெள்ளியில் முகக்கவசம் தயாரித்து விற்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளி முகக்கவசத்தை திருமண பரிசாக அளிப்பதற்காக அதிகளவில் வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
சந்தீப் தயாரித்து வரும் இந்த வெள்ளி மாஸ்க் 25 முதல் 35 கிராம் எடை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.2,500 முதல் 3,500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி முகக்கவசத்தை வாங்க விரும்புவோர் இரு தினங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய வேண்டுமாம்.
தங்கத்திலும் முகக்கவசம் விற்பனை செய்யப்படுகிறதா என்று அவரிடம் கேட்டபோது “சவரன் ரூ. 35 ஆயிரத்திற்கு மேல் விற்கப்படும் தங்கத்தை ஒரு முறை பயன்படுத்துவதற்காக யாரும் வாங்கி செல்லமாட்டார்கள், ஆனால் வெள்ளியில் அப்படி இல்லை. இது வரை 100க்கும் அதிகமான வெள்ளி முகக்கவசங்களை நான் விற்றுள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் தனது தொழிலில் பாதிப்பு ஏற்பட்டபோது, சந்தீப் சகோங்கரின் இந்த புதிய முயற்சி வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.