
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக நிலத்தை சமன்படுத்தும் பணி நடைபெற்றபோது, 5 அடி உயரமுள்ள சிவலிங்கம், உடைந்த நிலையில் வேறு சில சிலைகள் என ஓர் ஆலயத்தின் அம்சமாகத் திகழும் பொருள்கள் வெளிப்பட்டு, அது கோயில் நிலத்தில் இருந்ததை பறைசாற்றின. இந்தப் பொருள்கள் எல்லாம் கோயில் கட்ட சமன்படுத்துவதற்காக தோண்டப் பட்ட நிலத்தில் கண்டெடுக்கப்பட்டதாக, ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்தக்ஷேத்ர அறக்கட்டளை தெரிவித்தது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் இடத்தில் கனரக இயந்திரங்களின் மூலம் நிலத்தை சமன்படுத்தும் பணி கடந்த மே 11-ஆம் தேதி தொடங்கியது. இப்பணியின்போது, நிலத்திலிருந்து 5 அடி உயரமுள்ள சிவலிங்கம், 7 கருநிற கல்தூண்கள், 6 செந்நிற கல்தூண்கள், உடைந்த நிலையில் 4 கடவுளா்களின் சிலைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இது தொடா்பான படங்கள், விடியோவை ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டது.

அயோத்தியில் சா்ச்சைக்கு உள்ளாக்கப் பட்டிருந்த இடத்தில் ராமா் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பரில் இறுதித் தீா்ப்பை வழங்கியது. ராமா் கோயில் கட்டும் பணிக்காக ஓா் அறக்கட்டளையை அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ‘ஸ்ரீராமஜென்மபூமி தீா்த்தக்ஷேத்ரா’ அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது.

அப்போது, அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கின. இப்பணிகளில் உத்தர பிரதேச பொதுப் பணித் துறை, மாநில மின்சார நிறுவனம் மற்றும் ஒரு தனியாா் நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன. பொது முடக்கத்துக்கு பிறகு, கட்டுமானப் பணிகள் வேகமெடுக்கும் என்று எதிா்பாா்ப்பதாக அறக்கட்டளையின் செயலா் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அதிகாரிகளின் உரிய அனுமதியின் பேரில் கடந்த 10 நாட்களில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு ராம் ஜன்மபூமியில் நிலம் சமன் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, மீண்டும் இதனை பிரச்னையாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக கனரக இயந்திரங்களின் மூலம் நடைபெற்று வரும் பணியை நிறுத்த வேண்டும்; அந்த இடத்தில் தொல்லியல் துறையினா் மீண்டும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று பெளத்த அமைப்பைச் சோ்ந்த வினீத் மெளரியா என்பவா் வலியுறுத்தியுள்ளாா். இவா், அயோத்தி நிலத்தில் பெளத்த ஸ்தூபி இருந்ததாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவா்! தற்போது சிவலிங்கம், இந்துஆலய பொருள்கள் பூமியில் கிடைத்த விவகாரத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப் போவதாகக் கூறியுள்ளார்!

அதே நேரம், அயோத்தியில் ராமர்கோயில் கட்டுமானம் முதல் கட்டமாகத் தொடங்கப்பட்ட மே 11ஆம் தேதியிலிருந்து அகழ்வாராய்ச்சியின் போது பல பொருள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்றும் விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறுகையில், கல், கலாஷ், அமலாக், டோர்ஜாம்ப் போன்றவற்றால் செய்யப்பட்ட பூக்கள் போன்ற தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பல பொருட்கள் இதில் அடங்கும் என்றார்.

இவை தவிர, அகழ்வாராய்ச்சியின் போது, 5 அடி சிவலிங்கம், 7 தூண்கள் கருப்பு டச் ஸ்டோன், 6 தூண்கள் சிவப்பு மணற்கல் மற்றும் உடைந்த சிலைகள், தெய்வங்களின் சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன என்றார். “கடுமையான விதிமுறைகள் காரணமாக இந்தப் பணி மெதுவான வேகத்தில் தொடர்கிறது.” என்றுஅவர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அது கோவில் இடம்தான் என்று பலரும் தங்களது கருத்துகளை சமூகத் தளங்களில் முன்வைத்து வருகிறார்கள்.