இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 70 சதவீத பாதிப்புகளை கொண்ட 11 நகரங்களில் மட்டும் முழு கவனம் செலுத்தி, மே 31ம் தேதிக்குப் பிறகு 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து வரும் 31ஆம் தேதி ‘மன்கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பார் என்று கூறப் படுகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள 4ஆம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஆயினும், தற்போதும் கூட கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பில் 70 சதவீதம் பாதிப்பு இருக்கக் கூடிய 11 நகரங்களை மட்டும் தீவிர கவனத்துடன் கண்காணித்து, அங்கு மட்டும் மே 31ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் என்று கூறப் படுகிறது.
நாட்டில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மும்பை, தில்லி, பெங்களூரு, சென்னை, கோல்கட்டா, ஆமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர், இந்தூர் மற்றும் சூரத் ஆகிய 11 நகரங்களில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.
கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா, மே 31ஆம் தேதிக்குப் பின்னர் மத்திய அரசு அனுமதி அளிக்கப் படும் பட்சத்தில், கோயில்கள், வழிபாட்டிடங்கள் உடனே திறக்கப் படும் என்று கூறியிருந்தார். இது போல், மால்கள், சினிமா அரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் கல்வி நிலையங்கல் என அனைத்தும் திறப்பதற்கு காத்திருக்கின்றன. மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்த உடனேயே அனைத்தும் இயங்கும் என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர். இதே எண்ணத்தை மற்ற சில மாநிலங்களும் வெளிப்படுத்தியுள்ளன.