
திருநெல்வேலி: பள்ளிவாசலில் கஞ்சி ஊற்ற அனுமதி வழங்கியது போல், திருக்கோயில்களில் கூழ் ஊற்றவும் அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோயில்களின் சார்பில் அண்மையில் மனுக்கள் அளிக்கப் பட்டன.
அப்போது, கொரோனா காலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே அனுமதிக்க இயலாது என்று கூறி, வளாகத்துக்கு வெளியில் வைத்து மனுக்கள் பெறப் பட்டன.
ஆனால், தொடர்ந்து இஸ்லாமியர்கள் குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே மனு அளித்து படம் எடுத்து வெளியில் பதிவு செய்தனர். இதனால் ஏமாற்றமடைந்த இந்து முன்னணி, மாவட்ட ஆட்சியர் மத ரீதியாக பாகுபாடு பார்த்து செயல்படுகிறார் என்று புகார் மனு இந்து முன்னணி சார்பில் ஆளுநர், முதல்வர் என்று அளிக்கப் பட்டது.
இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அனுமதிக் கடிதத்தில், கூழ் ஊற்றுவதற்காக அனுமதி கோரி விண்ணப்பித்த கோயில்களில், உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி வழங்க அனுமதி அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.
இதை அடுத்து, தங்களின் போராட்டத்துக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது என்று, இந்து முன்னணி மாநிலச் செயலர் கா.குற்றாலநாதன் மகிழ்ச்சியுடன் கூறினார்.
