பிஹாரின் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் விவரம் அறியா குழந்தை ஒன்று இறந்து போன தன் தாய் உடன் போர்வையைப் பிடித்து இழுத்து விளையாடும் நெஞ்சைப் பிசையும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
குழந்தை மற்றும் இறந்த தாயார் குறித்த இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது! புலம் பெயர் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களைத் தாண்டி, ஒவ்வொரு இடத்தையும் கடந்து செல்கின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை வெளிக்காட்டும் விதமாய் அமைந்திருப்பதாகக் கூறி, இந்த வீடியோக்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இறந்த தாயின் மேல் கிடக்கும் போர்வைக்குள் புகுவதும் பிறகு வெளியே வருவதுமாக அந்தக் குழந்தையின் செயல் பலரையும் வேதனைப்படுத்தியுள்ளது. 23 வயதான அந்தப் பெண் புலம்பெயர்ந்தோர் சிறப்பு ரயிலில் திங்களன்று பிஹார் முசாபர்பூர் வந்தார். இந்தப் பெண்ணின் குடும்பத்தினர், உணவும் குடிநீரும் இன்றி உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளனர்.
இந்தப் பெண் குஜராத்தில் ரயிலைப் பிடித்துள்ளார் திங்களன்று முசாபர்பூர் வந்தவுடன் மயங்கி விழுந்துள்ளார். இவரது உடல் நடைமேடையில் கிடக்க அந்தக் குழந்தை தாயார் இறந்த உணர்வு ஏதுமின்றி, அவரை எழுப்ப முயன்றதோடு விளையாடியும் உள்ளது. பிறகு கொஞ்சம் பெரிய பையன் வந்து அந்தக் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளான்.
ரயில்வே அமைச்சகம் இது குறித்துக் குறிப்பிடுகையில், இவர் ரயிலிலேயே இறந்துள்ளதாகவும், இவர் தன் சகோதரி, சகோதரியின் கணவன் 2 குழந்தைகளுடன் சென்றதாகவும் தெரிவித்துள்ளது.