
கர்நாடகத்தின் சாம்ராஜ்நகர் தாலுகாவின் அன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூர்ணிமா (27). இவரது கணவர் கெம்பண்ணா (37). விவசாயி. இவர்கள் 2 பேருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கெம்பண்ணாவுக்கும், பூர்ணிமாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் பூர்ணிமா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று கெம்பண்ணா தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை சந்தித்தார். பின்னர் அவர், பூர்ணிமாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதன்பேரில் பூர்ணிமாவும் தனது குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு புறப்பட்டார். பூர்ணிமாவையும், குழந்தையையும் அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கெம்பண்ணா தேமஹள்ளி கிராமத்திற்கு புறப்பட்டார்.
கெம்பண்ணா மோட்டார் சைக்கிளை ஓட்ட, பூர்ணிமா குழந்தையுடன் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் தேமஹள்ளி கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பூர்ணிமா திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறினார். அதன்பேரில் கெம்பண்ணா மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
இதையடுத்து அங்கு ஓடும் கபினி ஆற்றுக்கு சென்ற பூர்ணிமா திடீரென ஆற்றில் குதித்துவிட்டார். அதைப்பார்த்த கெம்பண்ணா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ஆற்றில் குதித்து பூர்ணிமாவை காப்பாற்ற முயன்றார். ஆனால் 2 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்கள். அவர்களுடைய குழந்தை அனாதையாக மோட்டார் சைக்கிளிலேயே அமர்ந்து இருந்தது. அது அழுது கொண்டிருந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கெம்பண்ணா மற்றும் பூர்ணிமாவின் உடல்களை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் பூர்ணிமா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும், அவரை காப்பாற்ற முயன்றபோது கெம்பண்ணா தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. ஆனால் எதற்காக பூர்ணிமா தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. பின்னர் காவல்துறையினர் அந்த குழந்தையை மீட்டு பூர்ணிமாவின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.