
திருப்பதி:
திருப்பதி திருமலை வேங்கடாசலபதி திருக்கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவுக்கு, ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பாக, சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனை அமல் படுத்துவதற்கான முழு வீச்சில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சுமார் 1200 பொருட்கள், 500 சேவைகளுக்கான வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி திருக்கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, செய்யப் பயன்படும் மூலப்பொருட்கள் ஆகியவற்றுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப் பட்டிருந்தது. இதனால், லட்டு விற்பனை விலை அதிகரிக்கும் என்றும், அவ்வளவு பக்தர்களுக்கு லட்டு வழங்க இதனால் இயலாது என்றும் தேவஸ்தானம் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப் பட்டது. மேலும், லட்டு தயாரிப்பை குறைப்பது அல்லது நிறுத்துவது என்று முடிவுகள் எடுக்கப் பட்டன. மேலும், ஏழை எளியவர்கள் அதிகம் வந்து செல்லும் திருப்பதியில் உள்ள விடுதிகளுக்கான கட்டணமும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
இதை அடுத்து, திருப்பதி லட்டுவுக்கு வழங்கப்படும் இடு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க தேவஸ்தானம் சார்பில் ஆந்திர மாநில நிதி அமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணடுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு, திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. அவர்கள், திருப்பதி கோயில் நடைமுறைகள் தொய்வின்றி தொடரும் என்று நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.



