
சென்னை:
சென்னை ஐ.ஜி. அலுவலகம் அருகே வழக்குரைஞர் கேசவன் என்பவரை மர்ம நபர்கள் சராமரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
சென்னை கடற்கரை ஐ.ஜி. அலுவலகம் அருகே கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகில், இன்று காலை சுமார் 8.30 மணி அளவில் வழக்குரைஞர் கேசவன் வந்து கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கேசவனை சராமரியாக அரிவாளால் வெட்டி விட்டு வந்த வாகனங்களில் தப்பியோடியது.
மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால், மக்கள் மற்றும் ரயில் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பட்டப்பகலில் வழக்குரைஞர் ஒருவரை அரிவாளால் ஒரு கும்பல் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கேசவனை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் போலீஸார் தெரிவித்தனர்.



