“வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக”-பெரியவா
“சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது.
துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது.நிதானம்
மனுஷ லட்சணம். அது வந்துட்டா சமாதானம் வந்துடும்.
சமாதானம் வந்துட்டா எல்லா தானமும் வந்து மனுஷன்
பரோபகாரியா ஆயிடுவான்.பரோபகாரியை
பஞ்ச பூதங்கள் எப்பவுமே பாதுகாக்கும்.கஷ்டப்படுத்தாது”
கட்டுரை ஆசிரியர்-இந்திரா சௌந்தர்ராஜன்.
புத்தகம் மகாபெரியவர் பாகம்-1 ..(46)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பெரியவா பண்டரிபுரத்தில் தங்கி இருந்த சமயத்துல
அந்த இடத்திற்கு அருகிலேயே சந்திரபாகா என்னும்
நதி ஓடிக்கொண்டிருந்தது.நமக்கு காவேரி போல
பண்டரிபுரத்துக்கு சந்திரபாகா நதி விளங்குகிறது.
இதில் சில சமயங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
நதிகளில் வெள்ளம் பெருகலாம். அது ஊருக்குள்
புகுந்து நாசம் ஏற்படுத்தும் அபாயமும் உண்டு.
அன்று பெரியவர் தங்கி இருந்த கோசாலைக்குள்ளேயும்
வெள்ளம் புகுந்து விட்டது.
படிப்படியாக அது உயர்ந்து கொண்டும் சென்றது.
எல்லாரும் அச்சப்பட தொடங்கிவிட்டனர்.
நிச்சயம் அழிவு நேரப்போகிறது என்றும் கருதினர்.
பெரியவா முன்னால் எல்லாரும் பரிதாபமாக நின்றனர்.
பெரியவர் சிரித்தார்,
“மழை பெய்யலைன்னா பெய்யலங்கிற வருத்தம்.
பெஞ்சா இப்படி பெய்யறதேகிற வருத்தம்…
அப்படித்தானே?” என்று கேட்டார். எல்லாரிடமும் மவுனம்.
“நாம எப்படி இருக்கோம்கிறதைதான் இந்த வெள்ளம் சொல்றது.
நாம் ஒண்ணு வருத்தப்படுறோம்.இல்லைன்னா ரொம்ப
சந்தோஷமா ஒரே கூத்தும் பாட்டுமா இருக்கோம்.நிதானமா
அளவா நாம நடந்துக்கிறதேயில்லை.அதைத்தான் இயற்கை
ரூபத்துல இந்த மழை சொல்றது” என்ற பெரியவரை எல்லாரும்
மவுனமாக வெறித்தனர்.
மழை வெள்ளத்தை வைத்து மனித மனதோடு அதை
தொடர்புபடுத்தி பெரியவர் ஒரு பக்கம் உபதேசம் செய்த
போதிலும் அவர் கைகள் இரண்டும் வெள்ள நீரை
தள்ளிவிட்டபடியே, ‘போயிடு…போயிடு’ என்றன அவ்வப்போது.
சில மணிநேரங்களில் வெள்ளம் வடிந்து சந்திரபாகா நதி
அமைதியாக ஓடத்தொடங்கியது.
பெரியவரும்,”இது என் பேச்சை கேட்டுடுத்து….
நீங்களும் கேட்கணும்.
“சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது.
துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது.நிதானம்
மனுஷ லட்சணம். அது வந்துட்டா சமாதானம் வந்துடும்.
சமாதானம் வந்துட்டா எல்லா தானமும் வந்து மனுஷன்
பரோபகாரியா ஆயிடுவான்.பரோபகாரியை
பஞ்ச பூதங்கள் எப்பவுமே பாதுகாக்கும்.கஷ்டப்படுத்தாது”
என்ன ஒரு அரிய உபதேசம்! இதை அவர் வார்த்தைகளால்
மட்டும் கூறவில்லை. வெள்ளத்தை கட்டுப்படுத்திய
ஒரு பரோபகாரியாக அவரே முன் உதாரணமாக திகழ்ந்து
கொண்டு கூறினார்.
அதுதான் பெரியவரின் பெரும் சிறப்பு.




