
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் குணம் பெற, ஹைதராபாத்தில் இருந்து அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகின.
கடந்த ஜூன் 2 ஆம் தேதி அன்று, மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட ஜெ.அன்பழகனுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ஜெ.அன்பழகன் உடல்நிலை மோசமானதால் 3ஆம் தேதியிலிருந்து வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், அவருக்கு 80% க்கும் அதிகமான ஆக்சிஜன் வழங்கப் பட்டு, செயற்கை சுவாச முறையிலேயே அவர் இருப்பதாகவும், பின்னர் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு, ஆக்சிஜன் வழங்கல் 40% என்ற அளவில் இருப்பதாகவும் மருத்துவமனை தகவல் வெளியிட்டது.


இந்நிலையில், இரு தினங்கள் முன் மீண்டும் மருத்துவமனை வெளியிட்ட தகவலில், மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்ததாகவும், சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடு கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிடது.
இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவரும் தெலங்காணா ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஹைதராபாத்திலிருந்து கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.
தெலங்காணாவில் கொரோனா பாதிப்புக்கு ரெம்டெசிவிர் மருந்து சிகிச்சைக்காகக் கொடுக்கப்படுவதாகவும், இந்த மருந்தால், குணமடையும் வேகம் 30% அதிகரிக்கும் என்றும் கூறப் படுகிறது.



