
இந்தியாவிலேயே மிக அதிகமாக , மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. அதிலும் அந்த மாநில தலைநகரான மும்பை கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளது.
மருத்துவர்கள் , காவல் துறையினர் என முன் களப் பணியாளர்கள் பலரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அந்த மாநகரத்தின் துணை கமிஷனர் சிரிஷ் தீக்ஷித் உயிரிழந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.
இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான எந்த அறிகுறியும் இவருக்கு கிடையாது. மூன்று நாட்களுக்கு முன்பாக இவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டதோடு, அவரது குடும்பத்தினர் மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநகராட்சி அலுவலகத்தில் சிரீஷுடன், பணியாற்றிய சிலருக்கு வைரஸ் பாதிப்பு இருந்ததால் , அறிகுறிகள் இல்லாவிட்டாலும் சிரிஷ், தானாகவே , முன் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.
அந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு , சிகிச்சைக்கு உட்படலாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால் நோய் அறிகுறியே இல்லை. எனவே நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். வீட்டில் இருந்தே சிகிச்சை பெறுகிறேன், என்று கூறிய சிரிஷ் தீக்ஷித் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
ஆனால் இன்று காலை திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள், மருத்துவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். மருத்துவக் குழு, சிரிஷ் தீக்ஷித் வீட்டுக்கு செல்வதற்கு முன்பாக அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.