
உத்தரப் பிரதேசத்தில் காருக்குள் ஏறிய 4 குழந்தைகள் உள்ளுக்குள் கதவை அடைத்து விட்டதால் மூச்ச்சு விட முடியாமல் தவித்தன, இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தன. மீதி 2 குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.
குழந்தைகளுக்கு வயது 4 முதல் 7 இருக்கலாம். இது தொடர்பாக மொராதாபாத் எஸ்.பி. அமித் குமார் ஆனந்த் கூறும்போது, ‘காருக்குள் 4 குழந்தைகளுமே மயக்கமடைந்து விட்டன. அவர்கள் 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இரண்டு குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர்’ என்றார்.
குடும்பத்தினர் ஞாயிறன்றுதான் பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கினர். திங்கள் மதியம் காரைத் திறந்து 4 குழந்தைகளும் காருக்குள் சென்றன. கார் லாக் ஆக, அவர்களால் வெளியே வர முடியவில்லை.
விளையாடப் போன குழந்தைகள் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் குடும்பத்தினர் தேடினர். அப்போதுதான் காருக்குள் இருப்பது தெரிய வந்தது.
காருக்குள் சிக்கியதும் பிராணவாயு இன்றி குழந்தைகள் நால்வரும் மூச்சுத் திணறியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.