
பெங்களூரு:
கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 1 கோடி கமிஷனாகப் பெற்று ஏமாற்றிய வழக்கில், நகைச்சுவை நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை பெங்களூரு போலீசார் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.
நகைச்சுவை நடிகர், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு, ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.10 கோடி கமிஷன் பெற்றாராம். இதை அடுத்து தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், சீனிவாசன் கைது செய்யப்பட்டு தில்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுபோல், பெங்களூரைச் சேர்ந்த மஸ்ரூர் ஆலம், அவரது சகோதரர் சஜ்ஜாத் வாகம் ஆகியோருக்கு ரூ.30 கோடி கடன் பெற்றுத் தருவதாக ரூ.1 கோடி கமிஷன் பெற்று ஏமாற்றியதாக, பெங்களூரு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தில்லியில் வைத்து பெங்களூரு போலீசார் சீனிவாசனைக் கைது செய்தனர். நேற்று பெங்களூரு அழைத்து வரப்பட்ட சீனிவாசன், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்ற அனுமதியுடன் போலீசார் சீனிவாசனைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
கமிஷன் பெற்ற பணத்தை சினிமாவில் முதலீடு செய்து, தாம் நஷ்டப் பட்டதாக போலீசாரிடம் சீனிவாசன் கூறியுள்ளார். இவர் மீது சென்னை, தில்லி, பெங்களூரு உட்பட பல இடங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன.



