இன்று காலை திடீரென லடாக் பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, லடாக்கில் ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர், லடாக்கின் லே பகுதியில் உள்ள நிமு என்னும் இடத்தில் ராணுவ முகாமில் கூடியிருந்த வீரர்களிடையே உரை நிகழ்த்தினார். அப்போது, ஒரு படைக்கு தேவையான நான்கு குணங்கள் உண்டு. அது குறித்து மகான் திருவள்ளுவர் கூறியுள்ளார் என்று கூறி, “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி உரை நிகழ்த்தினார்.
லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், திடீரென பிரதமர் மோடி லடாக் – லே பகுதிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். முன்னதாக அங்கே இன்று காலை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்வதாக இருந்தது. ஆனால் அவர் ரஷ்யாவில் இருந்து தாமதமாகத் திரும்பிய நிலையில், முன்னதாக ராணுவத்தினரிடையே நிகழ்த்த வுள்ள உரை, ஆய்வு ஆகியவற்றை நிறுத்த வேண்டாமென பிரதமர் மோடியே குறித்த நேரத்தில் தாமே செல்வதாக முடிவு எடுத்துச் சென்றார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பயணம் வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப் பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி, இன்று திடீர் பயணமாக லடாக் சென்றார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உடன் இருந்தனர். லே பகுதியில் உள்ள நிமு என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாக்குச் சென்ற மோடி, ராணுவ வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக பிரதமர் மோடி அந்தப் பகுதியில் நடந்து வந்த போது, வீரர்கள், ”வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே” என உற்சாகமாக கோஷம் எழுப்பினர். வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்…” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். படைமாட்சி எனும் அதிகாரத்தில் இடம்பெற்ற குறள் எண் 766 இது.
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு – என்ற இந்தத் திருக்குறளில், வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடத்தை, தலைவரால் நம்பித் தெளியப் படுதல் ஆகிய நான்கு பண்புகளும் ஒரு படைக்குச் சிறந்தவை என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.
மறம் எனும் வீரமும், மானமும், நல்வழிச் சேரலும், தெளிவு உடைமையும் என இந்த நான்குமே படைக்கு அரணாகத் திகழ்வது. நல்லவழிச் சேரல் என்றால், வீரம் எடுத்துக் காட்டும் நேரத்தில், கலக்கம் இல்லாமல் இருத்தல் என்பார்கள். இதனை எடுத்துக் காட்டிப் பேசிய பிரதமர் மோடி, இந்திய வீரர்களின் தைரியம், மன உறுதியைக் கண்டு எதிரிகள் பயம் கொள்கிறார்கள். அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் தயாராகவே இருக்கிறோம் என்றார்.
கடல் மட்டத்தில் இருந்து 11ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது இந்த ராணுவ முகாம். அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, வீரர்களின் தியாகத்தையும், மன உறுதியையும் வெகுவாக பாராட்டிப் பேசினார்.
உங்களின் வீரம், நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் மலையை விட உயரமானது . வீரர்களின் வீரம், தைரியம் மூலம் ஒட்டு மொத்த உலகத்திற்கும் இந்திய ராணுவம் முக்கியமான மற்றும் வலுவான தகவலை அளித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு, ராணுவ வீரர்களான உங்களின் கைகளில் தான் உள்ளது. வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை. ஒட்டுமொத்த இந்திய மக்களின் நம்பிக்கை நமது ராணுவ வீரர்கள் தான்.
உங்களின் வீரத்தால் மக்கள் பெருமை கொள்கின்றனர். உங்களின் தியாகம் மற்றும் வீரத்தால் தேசம் தலைநிமிர்ந்து நிற்கிறது.
நமது எதிரிகளின் ஒவ்வொரு திட்டத்தையும் நாம் தூள் தூளாக்கி வருகிறோம். நமது நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. நமது வீரர்களின் செயலுக்கு நான் தலை வணங்குகிறேன்.
நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ளது. இந்திய நாட்டை காக்க உயிர் இழந்தவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறேன். எதையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. நாட்டின் எதிரிகளுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளீர்கள்.
இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயம் கொள்கிறார்கள். எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை. நமது வீரர்களுக்கு லடாக் மக்கள் உறுதுணையாக உள்ளனர்.
லடாக்கில் பயங்கரவாதத்தை உருவாக்க முயன்ற எதிரிகளின் சதி, தேசபக்தி கொண்ட மக்களால் முறியடிக்கப் பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை. மாதா சிந்துவினால் புனிதம் பெற்ற பூமி இது. சியாச்சின் முதல் கால்வான் பகுதி வரை நமது கட்டுப்பாட்டில் உள்ளது.
தற்போது நாம் எதிர்கொண்டுள்ள சவால் நம்மை வலுப்படுத்தியுள்ளது. இந்தியா அமைதியை விரும்பக்கூடிய நாடு என்பதை உலகம் அறியும். வீரம் என்பது அமைதியை நோக்கிச் செல்வது, அமைதியை எதிர்பார்ப்பது. பலவீனமாக உள்ளவர்கள், அமைதிக்கான நடவடிக்கையை தொடங்க மாட்டார்கள்.
அமைதியை எதிர்பார்த்தாலும் நமது நிலத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் நாம் அச்சம் கொள்ளப் போவதில்லை. ராணுவ வீரர்கள் தெளிவாக இருப்பதை அவர்களின் முகம் உணர்த்துகிறது. கடந்த காலங்களில் பல எதிரிகளுடன் போரிட்டு வருகிறோம். நமது வீரம் வழிவழியாக வந்த வரலாறு கொண்டது. இந்திய ராணுவத்தின் நெருப்பு போன்ற ஆக்ரோஷத்தை எதிரிகள் பார்த்துள்ளனர்.
நாடு பிடிக்கும் கொள்கைக்கு இந்த உலகம் எதிராக உள்ளது. நாடு பிடிக்கும் காலம் மலையேறி சென்றுவிட்டது. இப்போது ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன.
நமது எல்லைப் பகுதியில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது முழுவீச்சில் நடக்கும். அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் எல்லையில் ராணுவம் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.
நாம் புல்லாங்குழல் வைத்துள்ள கிருஷ்ணரை வணங்குகிறோம். அதேநேரம் அவர் கையில் சுதர்சன சக்கரமும் உள்ளது. அமைதியை விரும்பும் நாம் தேவைபட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்க தயங்க மாட்டோம்.
நாட்டை அபகரிக்க பேராசையுடன் செயல்பட்டோர் எப்போதும் வீழ்ச்சியை தான் சந்தித்துள்ளனர்… என்று பேசினார் பிரதமர் மோடி.