
கோரக்பூர்:
உத்தரப் பிரதேசத்தில் குழந்தைகள் பலியான கோரக்பூர் பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
உ.பி. மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ் தாஸ் (பி.ஆர்.டி) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் கடந்த 6 நாட்களில், பிறந்த பச்சிளம் குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் என 63 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மேலும் 9 குழந்தைகள் உயிர் இழந்தன. இதனால் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது.
குழந்தைகள் உயிரிழப்புக்கு மூளை அழற்சி எனும் கடுமையான நோய் காரணம் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜிவ் மிஸ்ரா கூறினார். ஆனால், மருத்துவமனையில் உயிர் காக்கத் தேவையான ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டதே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில், நிகழ்ந்த துயரச் சம்பவத்துக்கு மனிதத் தவறு காரணமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்த மாநில அரசு, முதல் கட்டமாக டாக்டர் மிஸ்ரா, ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கையாளக் கூடிய துறையின் துணை முதல்வர் கபீல் ஆகியோரை இடை நீக்கம் செய்தது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, அமைச்சர் அனுப்பிரியா, மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங், மருத்துவ கல்வித்துறை அமைச்சர் ஆசுதோஷ் டாண்டன் உள்ளிட்டோர் நேற்று கோரக்பூர் விரைந்தனர். பின்னர் அனைவரும் ஒன்றாக இன்று காலை 11 மணி அளவில் பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றனர். குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் ஆய்வு செய்த பின்னர், அந்தப் பிரிவின் தலைமை மருத்துவர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் தொடர்ந்து அங்கே குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும் விசாரித்தனர்.
ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘கடந்த இரண்டு மூன்று நாட்களாக இந்தச் சம்பவம் தொடர்பாக வெளி வரும் செய்திகள் குறித்து பிரதமர் மோடி மிகவும் கவலை கொண்டுள்ளார். அவர் என்னை போனில் அழைத்து, இதில் மாநில அரசுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று தெரிவித்தார். குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்படும். இதன் அடிப்படையில்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். எனவே ஆரம்பகட்ட விசாரணை முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதில் தவறு செய்தவர்கள் குறித்து அறியவந்தால், எவராயிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியபோது, கோரக்பூரில் ரூ.85 கோடி செலவில் குழந்தைகள் நோய் தொடர்பான தேசிய ஆராய்ச்சி மையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த் தொற்று, அதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்” என்றார்.
மாநில அமைச்சர் ஆசுதோஷ் டாண்டன் கூறுகையில், ‘‘பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்து வந்த நிறுவனம், தமக்கு உரிய பணத்தை கல்லூரி நிர்வாகம் தரவில்லை என்று புகார் தெரிவித்துள்ளது. கடந்த 5ஆம் தேதி மருத்துவக் கல்லூரி முதல்வர் மிஸ்ரா, நிலுவைத் தொகையை அந்நிறுவனத்துக்கு வழங்காத நிலையில் முன் அனுமதியின்றி உத்தரகாண்டுக்குச் சென்றுள்ளார். இது குறித்தும் விசாரிக்கப்படும்’’ என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘இப்பிரச்னையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மிஸ்ரா பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையின் குழந்தைகள் இறப்பை முந்தைய ஆண்டுடன் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஒப்பிட்டுக் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது“ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், உயிர்காக்கும் மருத்துவத் துறையில் ஏற்படும் கவனக் குறைவு, அரசு மருத்துவமனைக்கு மருந்துகள் வாங்குவதில் லஞ்ச ஊழல், கமிஷன்கள் அடிப்படையில் மருத்துவப் பொருள்கள் பெறுதல் என நாடு முழுதும் பரவியுள்ள முறைகேடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.



