புதுதில்லி:
பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக என்னை நியமித்துள்ளது, எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் கூறினார்.
புதிய ராணுவ அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கடந்த மார்ச் மாதம் கோவா முதல்வரகப் பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லியே, பாதுகாப்புத் துறையையும் கூடுதலாகக் கவனித்து வந்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையை மாற்றி அமைத்தார். வர்த்தக, தொழில் துறையை தனிப் பொறுப்பாக கவனித்து வந்த நிர்மலா சீதாராமனை கேபினட் அமைச்சராக அந்தஸ்து உயர்த்தி, புதிய ராணுவ அமைச்சராக்கினார். இதன்மூலம் ராணுவ அமைச்சர் பதவியை முழு நேரப் பொறுப்பாக ஏற்கும் முதல் பெண் என்ற பெயரையும், முதல் தமிழ்ப் பெண் என்ற சிறப்பையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
இது மிகப்பெரிய அங்கீகாரம் என்று பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
‘‘ராணுவ அமைச்சர் பதவி என்பது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம். நான் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், நேர்மையுடனும் அந்த பொறுப்பினை நிறைவேற்றுவேன்.
நான் மக்களுக்கும், அதிகாரத்தில் இருப்போருக்கும் இடையே, குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து வந்து அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இடையே பாலமாக இருப்பேன்’’ என்று கூறினார்.
இதனிடையே நிர்மலா சீதாராமன் குறித்து கருத்து தெரிவித்த அருண் ஜேட்லி, ‘‘நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ அமைச்சராக பதவி உயர்வு அளித்திருப்பது குறிப்பிடத் தகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம். அவர் சிறப்பாக செயல்படுபவர். அதனால்தான் உயர்ந்த பொறுப்பினைப் பெற்றுள்ளார். எனது இடத்துக்கு மிகவும் தகுதி வாய்ந்த ஒருவரைப் பெற்றிருக்கிறோம் என்பதை உறுதிபடச் சொல்வேன். அவர் இத் துறையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வார்’’ என்று பாராட்டினார்.



