துபையிலிருந்து 191 பேருடன் வந்த ‘ஏர் இந்தியா’ விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்ளிட்ட 15 பேர் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா ஊரடங்கால், வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியா அழைத்து வரும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் துபையில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 191 பேர் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ‘ஏர் இந்தியா’ விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து வரப்பட்டனர்.
இந்த விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விமானம் தரையிறங்கிய போது, விமானத்தின் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, ஓடுதளத்திலிருந்து விலகி, 35 அடி தொலைவிலிருந்த பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி உள்பட 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். தீயணைப்புத்துறையினர், காயமடைந்த பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடும் மழை காரணமாக விபத்து நடந்துள்ளதாகக் கூறப் படுகிறது! விமானத்தின் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டதாகவும், இதனால், ஓடுதளத்திலிருந்து விலகி விபத்துக்கு உள்ளானதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் விமானி உயிரிழந்துள்ளார். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினர் விபத்துக்குள்ளான பகுதிக்கு விரைந்தனர்.
கோழிக்கோடு நோக்கி வந்த இந்த ஏர் இந்தியா B737 விமானத்தில், 174 பயணிகள், 10 கைக்குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 5 கேபின் குழுவினர் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கேரள விமான விபத்து குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கேரளாவில் விமான விபத்து தகவலறிந்து மனவேதனை அடைந்தேன் என தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கேரள விமான விபத்து தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என மோடி உறுதி தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆட்சியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நெருக்கடியை எதிர்கொள்ள கேரள அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் என்று பினராயி விஜயன் கூறினார்.
கோழிக்கோடு விமான விபத்து உதவி எண் அறிவிப்பு- 0495 – 2376901 .
கோழிக்கோடு விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அவர்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள
துபாய் இந்திய தூதரகத்தின் உதவி எண்கள்: 056 546 3903, 0543090572, 0543090572, 0543090575
இந்தியாவில் உள்ளவர்களுக்கு – 0495 2376901