பயணிகள் ரயில், வழக்கமான மெயில், எக்ஸ்பிரஸ், புறநகர் மின்சார ரயில்கள் என அனைத்து விதமான ரயில்களும் இயங்குவது, வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது என்று செய்திகள் ஊடகங்களில் வெளியாயின.
இது குறித்து ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு என்று குறிப்பிட்ட அறிவிப்பில், அனைத்து இந்தியன் ரயில்வேக்களுக்கும் அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையில், ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை ரயில்கள் அனைத்தும் இயங்குவது ரத்து செய்யப் படுவதாக 25.06.2020 அன்று அனுப்பப் பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. அது தற்போது செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. அனைத்துவிதமான ரயில்கள், பயணிகள் ரயில், புறநகர் மின்சார ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள், மெயில்கள் அனைத்தும் செப்.30 வரை ரத்து செய்யப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
எனினும், தற்போது இயங்கும் சிறப்பு மெயில்/எக்ஸ்பிரஸ் வண்டிகள் தொடர்ந்து இயக்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால் இந்த அறிவிப்பு ரயில்வே வாரியத்தில் இருந்து வெளியிடப் படவில்லை என்றும், ரயில் ரத்து நீட்டிப்பு குறித்து எந்த விதமான புதிய அறிவிப்பும் ரயில்வே வாரியத்தில் இருந்து இன்று வெளியிடப் படவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் டிவிட்டர் பதிவில் இது தெரிவிக்கப் பட்டுள்ளது.