கண் இமைக்கும் நேரத்திற்குள் பெண் ஒருவரை காரில் கடத்திச் சென்ற சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது
கர்நாடகா மாநிலத்தின் கோலார் பகுதியில் வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு சாலை பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. அப்போது இரண்டு பெண்கள் அந்த வழியாக நடந்து சென்றுகொண்டு இருக்கின்றனர். அவர்களின் எதிரே மெதுவாக வரும் இன்னோவா கார் ஒன்று அந்த பெண்கள் அருகில் வரும் போது திடீரென நிற்கிறது.
அப்போது காருக்குள் இருந்து இறங்கிய இருவர் சாலையில் சென்ற இரு பெண்களில் ஒருவரை கண் இமைக்கும் நேரத்திற்குள் தூக்கி காருக்குள் வலுக்கட்டாயமாக தள்ளுகிறார்.
உடனடியாக காரின் கதவுகள் மூடப்பட்டு கார் பாய்கிறது. இந்தக் காட்சி கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதனையடுத்து துமகுரு என்ற பகுதியில் இருந்து, அந்தப் பெண்ணை வெள்ளிக்கிழமை காலை போலீசார் மீட்டனர். மீண்டும் அந்தப்பெண் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டார். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவசங்கர், பாலாஜி, தீபக் ஆகிய 3 பேர் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சிவசங்கர் தான் இந்தக் கடத்தலின் மூளையாக இருந்தவர் என்றும், தன்னை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் அவர் பெண்ணை கடத்தியுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.