
இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனை சரியான பாதையில் செல்கிறது என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’, குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த ஜைடஸ் கேடில்லா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள ‘ஜைகோவ்-டி’ கொரோனா தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூட், இந்தியாவில் பரிசோதனை செய்து வருகிறது. இந்த தடுப்பூசிக்கு ‘கோவிட்ஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் உறுப்பினரும், தேசிய கொரோனா வைரஸ் தடுப்பு செயல் குழுவின் தலைவருமான டாக்டர் வி.கே.பால் தில்லியில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனை சரியானபாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த மருந்துகளுக்கான விலை இன்னமும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
2 தடுப்பூசிகள் முதல் மற்றும் 2-ம்கட்ட பரிசோதனையில் உள்ளன. அவற்றின் முடிவுகள் இன்னும் சிலவாரங்களில் கிடைக்கும். மற்றொரு தடுப்பூசி 3-வது கட்ட பரிசோதனைக்கு முன்னேறியுள்ளது.
3 தடுப்பூசிகளின் பரிசோதனைகளும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கிறோம். எனினும் 100 சதவீத வெற்றியை எதிர்பார்க்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.