மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் பாஜக தலைமையிலான அரசில் சிவசேனா அங்கம் வகிக்கிறது. ஆனாலும் பாஜக அரசின் பல்வேறு செயல்பாடுகளை சிவசேனா அவ்வப்போது குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு நாங்கள் பொறுப்பில்லை. இந்த குற்றச்சாட்டை பகிர்ந்துகொள்ள நாங்கள் விரும்பவில்லை. அரசுக்கான ஆதரவை தொடர்வதா அல்லது விலக்கிக் கொள்வதா என்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம்” என்றார்.
மேலும் சிவசேனாவின் நாளேடான சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்ப தாவது: மகாராஷ்டிராவில் மின்சார பற்றாக்குறை நிலவுகிறது. விவசாயத்துக்கு டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. டீசல் விலை உயர்வால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலைக்கு டீசல் விலை உயர்வும் முக்கிய காரணம்.
இந்நிலையில் மத்திய அமைச்சராக உள்ள ஒருவர் (அல்போன்ஸ்) கார், பைக் வைத்திருப்போர் பட்டினியால் வாடவில்லை என்றும் அவர்களால் அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசலை வாங்க முடியும் என்றும் கூறி உள்ளார். முன்னாள் அரசு அதிகாரியாக இருந்த அவர் எப்போதும் தனது பாக்கெட்டில் இருந்து எரிபொருளுக்கு செலவிடவில்லை. அதனால்தான் இவ்வாறு கூறுகிறார்.
இவரது கருத்து ஏழை மக்களின் முகத்தில் துப்புவது போல உள்ளது. தகுதி இல்லாத மற்றும் மக்களுடன் தொடர்பு இல்லாதவர்கள் எல்லாம் அரசியலில் நுழைந்து நாட்டை ஆட்சி செய்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது



