
பட்டாசு வெடிக்க தடை விதித்த மாநிலங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் துறவியர் பேரவை மாநில அமைப்பாளர் (தென்தமிழகம்) பா சரவணன் கார்த்திக் அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்… ராஜஸ்தான் ஒடிசா டெல்லி ஹரியானா மாநில அரசுகள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. சிவகாசியில் பட்டாசு தயாரித்தாலும் இந்தியா முழுவதும் பல லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரம் பட்டாசை மையப்படுத்தியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகாசியில் பிரிண்டிங் தொழிலும் இங்கு பட்டாசு தொழிலை மையப்படுத்தி உள்ளது. சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்தே சீனி வெடி லட்சுமி வெடி போன்ற பல வீடுகளுக்கு தேவையான பேப்பர்களை சுருட்டி கொடுத்து தங்களின் வாழ்வாதாரங்களை பெருக்கிக் கொள்கிறார்கள்.
மேலும் பல லட்ச மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பட்டாசு தொழிலில் மிகப் பெரிய அளவில் வருவாய் உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உத்தரவிட்டு உள்ளது.
இந்த உத்தரவையும் கடைப்பிடிக்காமல் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரங்களை சீரழிக்கும் விதமாகவும் தீபாவளியை நீர்த்து போக செய்யும் வகையிலும் செயல்பட்டு தடை விதித்திருக்கும் மாநிலங்களை விஷ்வ ஹிந்து பரிஷத் வன்மையாக கண்டிக்கிறது.

ஒரு வாரமே இருக்கும் நிலையில் இது போன்ற தடைகள் பட்டாசு விற்பனையை மட்டுமல்ல பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கக்கூடிய செயலுமாகும். அதுமட்டும் அல்லாமல் இரண்டு மணி நேரத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்றும் சுற்றுப்புறச் சூழலும் பெரிய அளவில் மாசு அடைந்து விட போவதில்லை. மேலும் இந்த தடையானது ஹிந்து பண்டிகைகளுக்கு விதிக்கப்பட்டு இருக்கக்கூடிய தடையாகவே மட்டுமே நாங்கள் கருதுகிறோம்
இந்த விவகாரத்தில் தமிழக அரசும் மத்திய அரசும் இதில் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் பேசி தடையை நீக்க செய்ய வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி என்ன என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கூறமுடியுமா?
மேலும் பட்டாசு தடை வழக்கு தொடர்பவர்களின் பின்புலத்தை அரசு, உளவுத்துறை கொண்டு ஆராய வேண்டும். மேலும் இந்த தடையை விதித்து இருக்கும் மாநிலங்கள் தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் விருதுநகர் மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.